என் மலர்
உள்ளூர் செய்திகள்
புதுவையில் மீண்டும் மழை: நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்பனைக்கு அனுமதி
- புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
- நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருவதும், மறுபுறம் கிளம்பிச்செல்வதுமாக உள்ளனர். புத்தாண்டுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. விடுதி அறைகள் நிரம்பி வழிகிறது. ஓட்டல்களில் உணவுக்காக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். நகரம் முழுவதும் முளைத்துள்ள சாலையோர உணகங்கள், சிற்றுண்டி கடைகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நகர பகுதியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வாகனங்கள் ஊர்ந்துசெல்கிறது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்க கடற்ரை சாலை, பாண்டிமெரீனா பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர். போலீசார் கடலில் இறங்கி குளிப்பதை தடுத்து அறிவுறுத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு தொடர்ந்து பெய்த மழையால் நகரம், சண்டே மார்க்கெட்டில் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்தனர். கடற்கரை சாலையும் வெறிச்சோடியது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியே செல்லமுடியாமல் ஓட்டல் மற்றும் விடுதிகளில் முடங்கி போனார்கள்.
வழக்கமாக புதுவையில் டிசம்பர் மாதம் குளிர் வாட்டும். கடந்த சில நாட்களாக புதுவையில் குளிர் அதிகரித்துள்ளது. ஆனால் 2 நாட்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாளை உச்சமாக இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கெடுக்கும் வகையில் மழை பெய்யுமோ? என வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். அது மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்கள், மதுபார்கள் திறந்த வெளியில் பல்வேறு இசை, கலைநிகழ்ச்சிகள், மது, உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவை மழையால் சீர்குலையுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்த 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங்கை அறிந்து கொள்ள கி.யூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களிலிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
பார்களிலும், கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் இரவு ஒரு மணி வரை மது வழங்க கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுவையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியிலும் 300 போக்குவரத்து போலீசார் உட்பட 2 ஆயிரம் போலீசாரும், 500 தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பணியிடங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புத்தாண்டை வரவேற்க நாளை மாலை முதல் நள்ளிரவு வரை லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.