search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

    • மதுரையில் 4 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி 12 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.

    சென்னை:

    தழிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ. குழுவின் அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற பின்னர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் இது தொடர்பாக பலமுறை சோதனை நடைபெற்றுள்ளது.

    தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்கிற கோணத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரி, மண்ணடி ஆகிய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது சென்னையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர் தாங்கல் புதிய காலனியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக் (வயது 55). இவர் கடந்த 8 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் வட சென்னை மாவட்ட செயலாளரான இவர் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியில் இருந்து அப்துல் ரசாக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் வசித்து வந்த இவர் பின்னர் அங்கிருந்து இடம் மாறி திருவொற்றியூர் தாங்கல் பகுதிக்கு வந்து குடியேறி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் முகமது கைசர் வீட்டிற்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

    பின்னர் முகமது கைசரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனை நடைபெற்றது. மதுரையில் இருந்து வந்த 3 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி வீட்டு முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சோதனையில் அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய தடயங்கள் கிடைத்ததை தொடர்ந்து விசாரணைக்காக சாதிக் அலியை போலீசார் அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அவரது வீட்டு முன்பு எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் குவிந்தனர். அவர்கள் சாதிக் அலி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல தலைவர் யாசர் அராபத் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது.

    விமானத்தில் இருந்து இறங்கிய தஞ்சையை சேர்ந்த முகம்மது அசாப் என்பவரை தேசிய பாதுகாப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விமான நிலைய வளாகத்திலேயே தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே போன்று வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் 4 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    நெல்பேட்டையில் மட்டும் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மதுரை நெல்பேட்டையில் அப்பாஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஆவணங்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்கள் முழுமையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்றைய சோதனையின்போது சென்னையில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பழனியில் முகமது கைசர் என்பவரை கைது செய்திருக்கிறார்கள். தேனி, திருச்சி, மதுரையில் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதன்மூலம் 6 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி 12 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரையில் ஏற்கனவே கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம்.

    நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரிய வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரிடம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மதுரை மாநகரில் தெப்பக்குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×