search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகங்கள்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
    X

    அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகங்கள்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

    • ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார்.
    • அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அக்கட்சியில் இணைய முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை ஒரு போதும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க.வை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது. தற்போது அ.தி.மு.க.வில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைவோம்" என்று கூறினார்.

    இதற்கு மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதில் அளித்தார். ஓ.பன்னீர் செல்வம் குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சேர்வதற்கு ஓ.பி.எஸ். நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் உள்பட 3 பேர் நீக்கப்பட்டுவிட்டார்கள்.

    ஓ.பி.எஸ். எப்போதுமே இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்த வரலாறு கிடையாது. புரட் சித் தலைவி அம்மா முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அம்மாவை எதிர்த்து திரையுலகத்தை சேர்ந்த வெண்ணிற ஆடை நிர்மலா போட்டியிடுகிறார். அவருக்கு தலைமை ஏஜெண்டாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதே அம்மாவுக்கு அவர் விசுவாசமாக இல்லை. சிலருடைய சிபாரிசால் கட்சிக்குள் நுழைந்தார். மீண்டும் அந்த துரோகத்தை செய்ய ஆரம்பித்து விட்டார். அதற்கு பிறகு அம்மா அவரை முதல்-அமைச்சராக்கி னார்.

    அம்மா இறந்த பிறகு உடனடியாக அவர் தர்ம யுத்தத்தை மேற்கொண்டார். மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தலைமை நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் சொன்னார்கள். அதன்படி நாங்கள் ஒன்றாக இணைகின்ற போது பல கோரிக்கைகளை அவர் வைத்தார்.

    அதில் ஒன்று அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார். அதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு ஆணையத்தை நியமித்தோம். யாரை சுட்டிக்காட்டி அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஒருவர் மீது குற்றம் சுமத்தி அதை விசாரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினார். அந்த கட்டாயத்தின் பேரில் ஆணையத்தை அமைத்தோம். ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அந்த ஆணையம் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் அவர் ஆஜராகவில்லை.

    அதற்கு பிறகு 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வேண்டும் என்று கேட்டார். அவருக்கு வெறும் 3 சதவீதம் பேர் தான் ஆதரவு இருந்தது.

    10 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஆதரவாக இருந்தார்கள். 97 சதவீதம் பேர் எங்கள் பக்கம் இருந்தாலும் கூட எங்களுடைய மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். நல்ல இலாகா கொடுத்தோம். அப்போதும் அவருக்கு மன திருப்தியில்லை.

    2019 பாராளுமன்ற தேர்லில் அவரது மகனை தேனி தொகுதி வேட்பாளராக அறிவித்தார்கள். அதை மட்டும் தான் அவர் கவனித்தார். இடைத்தேர்தலில் அவர் அக்கறையே செலுத்தவில்லை. அதோடு ஆண்டிப்பட்டி, பெரிய குளம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில் அவரது மகன் அதிக ஓட்டுகள் பெறுகிறார்.

    அ.தி.முக. வேட்பாளர் குறைவான ஓட்டுகளை பெறுகிறார். அப்படி என்றால் அவர் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறாரா? ஏன் என்றால் அதில் வெற்றி பெற்று வந்தால் கூட ஆட்சியை காப்பாற்ற முடியும்.

    ஆனால் ஆட்சியை பற்றி அவருக்கு கவலையில்லை. எங்களுடைய தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வருகின்ற போது சில பிரச்சினைகள் வந்தது. வாக்குவாதம் வந்தது.

    அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் அவரை வீடு தேடி சென்று ஒற்றுமையாக இருப்போம் என்று பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் ஒத்துக்கொள்ள வில்லை.

    அதன் பிறகுதான் அவர் நீதிமன்றம் சென்றார். பின்னர் பொதுக்குழு கூடியது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது ரடிவுகளை அழைத்து சென்று கல்லால் கட்சிக்காரர்களின் கார் களை நொறுக்கி, தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி பொருட்களை திருடி சென்று விட்டார்.

    இவரை ஒருங்கிணைப் பாளராக ஆக்கிய கொடு மைக்காக தொண்டர்கள் பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவரை அடித்து விட்டார்கள் என்று புகார் கொடுத்து பல பேர் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார்கள்.

    ஆக இப்படிப்பட்டவர், சுயநலவாதி. அதற்கு பிறகு வழக்கு போட்டார். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கிறார். எந்தவிதத்தில் நியாயம். அப்புறம் நீதிமன்றம், அதற்கு பிறகு தேர்தல் ஆணையம் எங்கள் தரப்பில் தான் நியாபம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போதாவது இந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் என்று பார்த்தால் எங்களுடைய வேட்பாளரை எதிர்த்து இரட்டைஇலையை எதிர்த்து ராமநாதபுரத்தில் நிற்கிறார். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்.

    கட்சிக்காரர்களை எப்படி அரவணைப்பார். இவர் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருந்ததே கிடையாது. அவர் சுயநலம் படைத்தவர். அ.தி.மு.கவில் அவர்களை இணைக்கின்ற பேச்சுக்கு ஒரு சதவீதம் கூட இடம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×