என் மலர்
உள்ளூர் செய்திகள்
4 தலைமுறை வாரிசுகளுடன் 110-வது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி மரணம்
- ஊரையே அழைத்து கறி விருந்து வைத்து திருவிழா போல 110-வது பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடினர்.
- மூதாட்டி ராசாம்பாளுக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திர படையாட்சி-ராசாம்பாள் தம்பதியினர். இவர்களுக்கு 14 பிள்ளைகள் இருந்த நிலையில் 7 பேர் இறந்து விட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு சந்திர படையாட்சி உடல்நிலை குறைவால் இறந்துள்ளார். இதை தொடர்ந்து கடைசி மகனான ஞானசேகரன் அவரது மனைவி தமிழ்ச் செல்வி பராமரிப்பில் ராசாம்பாள் வாழ்ந்து வந்தார். ராசாம்பாளுக்கு 110 வயதான நிலையில், அவரது பிறந்த நாளை கடைசி மகன் ஞானசேகரன் உள்ளிட்ட 7 பிள்ளைகள், மருமகள்கள், பேர குழந்தைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என அவரது உறவினர்கள் சூழ 4 தலை முறை வாரிசுகளுடன் 110-வது பிறந்த நாளை சமீபத்தில் மூதாட்டி ராசாம்பாள் கொண்டாடினார்.
ஊரையே அழைத்து கறி விருந்து வைத்து திருவிழா போல 110-வது பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மட்டுமின்றி சுற்று வட்டார மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு செல்லும் பிள்ளைகளின் மத்தியில் 110 வயது வரை தனது தாயை பராமரித்து வந்து 110-வது பிறந்த நாளை கறி விருந்துடன் திருவிழா போல கொண்டாடிய ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டப்பட்டது.
இந்த நிலையில மூதாட்டி ராசாம்பாளுக்கு நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பண்ருட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மூதாட்டி ராசாம்பாள் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேலிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.