search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமாக வீட்டுக்கு அனுப்பும் போதுதான் நிம்மதி வரும்- நர்சின் அனுபவங்கள்
    X

    பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமாக வீட்டுக்கு அனுப்பும் போதுதான் நிம்மதி வரும்- நர்சின் அனுபவங்கள்

    • ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம்.
    • தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.

    சென்னை:

    உலக நர்சுகள் தினம் இன்று. நோயாளிகளின் வளர்ப்பு தாய் போல் செயல்படும் இவர்களது பணி மகத்தானது.

    அதிலும் பிறந்த குழந்தைகளை பெற்ற தாய் போல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது சாதாரண விஷயமல்ல. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் பணிபுரியும் ஒவ்வொரு நர்சும் அந்த குழந்தைகளின் மற்றொரு தாய் போன்றவர்கள்தான்.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் நர்சு சாந்திக்கு இந்த ஆண்டின் சிறந்த நர்சுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வார்டு அனுபவம் பற்றி சாந்தி கூறியதாவது:-

    இந்த வார்டில் பணியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரவில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனுமதிக்கப் பட்டிருக்கும் அத்தனை குழந்தைகளும் அப்போது பிறந்தவைகள்.

    அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆக்சிஜன் பிரச்சினை வரலாம். உடனே அட்டன்ட் பண்ண வேண்டும். சில நிமிடங்கள் தாமதித்தாலும் ஆபத்து நேரிடலாம்.

    ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம். எனவே, எந்த நேரமும் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் குழந்தைகளின் அருகில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    ஆக்சிஜன் வைத்திருக்கும் முக மூடியை கவனித்தல், வென்டிலேட்டர் பராமரிப்பு நரம்பு வழியாக மருந்து செலுத்துதல் ஆகியவை முக்கியம். அதுமட்டுமல்ல இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை நரம்பு வழியாகவோ வாய் வழியாகவோ உணவு வழங்க வேண்டும். தாய்ப்பால் வழங்குவதாக இருந்தால் தாயிடம் குழந்தையை கொடுத்து பாலூட்ட வைக்க வேண்டும்.

    தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.

    கொரோனா காலத்தில் தாய்ப்பால் வங்கிக்கும் பால் கிடைக்காமல் சிரமப் பட்டோம். அந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருந்தது.

    குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் பராமரித்து ஆரோக்கியத்துடன் தாயிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பும் போதுதான் மகிழ்ச்சியும், நிம்மதியும் வரும் என்றார்.

    Next Story
    ×