என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் அருகே 15 நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்
- சடையங்குப்பம் பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
- கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததாக தெரிகிறது.
திருவொற்றியூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தது. மேலும் மாண்டஸ் புயல் காரணமாகவும் நல்ல மழை கொட்டியது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீர் வழங்கும் ஏரி, குளங்களும் முழுவதும் நிரம்பின.
இந்நிலையில் திருவொற்றியூர் அருகே கடந்த 15 நாட்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். மணலி மண்டலம் 16-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் இந்த நிலை நீடித்து வருகிறது.
திருவொற்றியூர் அருகே சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரை அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் தெருக்குழாய்களில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தெருக்குழாய்களில் தண்ணீருக்காக காலிகுடங்கள் குவிந்து கிடக்கின்றன. அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது கனரக வாகனங்களால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சடையங்குப்பம் பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து சடையங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் தண்ணீர் தட்டுப்பாடு வரும். ஆனால் பருவமழை முடிந்து ஒரு மாதத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. டேங்கர் லாரி மூலம் வினியோகிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இல்லை. அதில் பாசி மற்றும் சிறு மீன்கள், பூச்சிகள் வருகிறது. இதனால் அதை குடிக்க பயன்படுத்த முடியவில்லை. கேன் வாட்டர் வாங்கி குடிக்க இங்குள்ள மக்களுக்கு போதிய வசதி இல்லை. உடைந்த குழாய்களை கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக குடிநீர் குழாய்களை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நைனியப்பன் (கிராம செயலாளர்):
எங்கள் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது, மிகவும் பின்தங்கிய எங்கள் கிராமத்தில் அடிக்கடி குடிநீர் வருவது தடைபடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டபடுகிறோம். சடைங்குப்பம் ஏரியை தூர்வாரி கொடுத்தாலே அந்த தண்ணீரை நாங்கள் துணி துவைப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோம்.
தொடர்ந்து இதேபோன்று பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலை வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தரவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






