search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகமெடுத்தது- 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவு
    X

    சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகமெடுத்தது- 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவு

    • கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது.
    • இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது. புதிய வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்டுமான தொழிலிலும் தொய்வு நிலை காணப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது. புதிய கட்டுமான திட்டங்களும் தொடங்கப்பட்டன.

    வீடு வாங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை கடந்த ஆண்டு முதல் அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது.

    தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 34.41 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள 63 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.7 ஆயிரத்து 727 கோடி வருமானம் கிடைத்துள்ளது.பத்திரப்பதிவுத்துறை மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 44 சதவீதம் சென்னையில் இருந்தே கிடைத்துள்ளது.

    கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் சென்னை மண்டலத்தில் 3.4 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

    சென்னை குன்றத்தூர், திருப்பத்தூர், கூடுவாஞ்சேரி, சேலையூர், ஆவடி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னையில் முக்கியமான இடங்களில் நிலத்தின் விலை அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவினர் குன்றத்தூர், அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாங்குகிறார்கள்.

    சென்னையில் அதிகபட்சமாக குன்றத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் 27 ஆயிரத்து 705 பத்திரங்கள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்த படியாக திருப்போரூரில் 25 ஆயிரத்து 941 பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×