search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை நீரில் மூழ்கிய உப்பளங்கள் - நிவாரணம் வழங்க கோரிக்கை
    X

    மழை நீரில் மூழ்கிய உப்பளங்கள் - நிவாரணம் வழங்க கோரிக்கை

    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதலே மேக மூட்டங்களுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழையின் வேகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த மழை இரவு முழுக்க கொட்டி தீர்த்தது. இதனால் மரக்காணம் பகுதியில் ஒரே நாளில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இந்த கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பங்கள் மூழ்கி தற்போது பெரிய ஏரி போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மரக்காணம் அருகே 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காணிமேடு, மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மரக்காணம் செல்ல வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரம்சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது . இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் அப்பகுதியில் கட்டும் மேம்பாலம் பணியை உடனடியாக கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    Next Story
    ×