search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்த கல்வியாண்டு முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் பருவத்தேர்வு- மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டம்
    X

    அடுத்த கல்வியாண்டு முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் பருவத்தேர்வு- மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டம்

    • செமஸ்டர் தேர்வு 75 மதிப்பெண்ணிற்கும் உள்மதிப்பீடு 25 மதிப்பெண்ணிற்கும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் மற்றும் இணைப்பு சார்பற்ற கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பீட்டில் இது சீரான தன்மையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு 60 மதிப்பெண்களுக்கும் உள்மதிப்பீடு தேர்வு 40 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது.

    தன்னாட்சி கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டிற்கு 50:50, 60:40 என்று வெவ்வேறு வெயிட்டேஜ் உள்ளது.

    அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒரே மதிப்பெண் முறையை கொண்டு வரும் வகையில் செமஸ்டர் தேர்வு 75 மதிப்பெண்ணிற்கும் உள்மதிப்பீடு 25 மதிப்பெண்ணிற்கும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் மற்றும் 127 இளங்கலை மற்றும் முதுகலை பாடத் திட்டங்களுக்கான மாதிரி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது மதிப்பீட்டிற்கான இந்த பொதுவான வெயிட்டேஜ் பற்றி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு, உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் மற்றும் இணைப்பு சார்பற்ற கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பீட்டில் இது சீரான தன்மையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் அதிகாரிகள் கூறும்போது, செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் தேர்வுகளுக்கு 75:25 என்ற புதிய வெயிட்டேஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அக மதிப்பீட்டில் கூட பணி நியமனம், கருத்தரங்குகளில் கலந்து கொள்வது மற்றும் வருகைப்பதிவு ஆகியவற்றிற்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    எம்.பி.ஏ. போன்ற சில படிப்புகள் மதிப்பீட்டிற்காக வேறுபட்ட வெயிட்டேஜ் அமைப்பை கொண்டு இருக்கலாம் என்றனர்.

    மாதிரி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒரு சுற்றறிக்கையில் அனைத்து பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் மாதிரிப் பாடத் திட்டத்தில் இருந்து 75 சதவீத பாட உள்ளடக்கத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று மாநில உயர் கல்வி கவுன்சில் கூறியுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் உள்ளூர் தொழில் தேவைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளால் தீர்மானிக்கப்படலாம் என கூறப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் துணை தலைவர் ராமசாமி கூறுகையில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம், வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகள் மற்றும் மென்திறன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதேபோன்ற பாடத் திட்டத்தை பின்பற்றுவது, ஒரு பல்கலைக் கழகத்தில் இருந்து மற்றொரு பல்கலைக் கழகத்துக்கு மாணவர்களை நகர்த்துவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×