search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியுடன் ரெயிலில் பாய்ந்த காதலனுக்கு மூளைச்சாவு
    X

    மாணவியுடன் ரெயிலில் பாய்ந்த காதலனுக்கு மூளைச்சாவு

    • சப்-இன்ஸ்பெக்டர் ஆவான் என்று நினைத்தவன் அசைவின்றி கிடப்பதாக தந்தை கண்ணீர் மல்க கூறினார்.
    • இளங்கோவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    உள்ளகரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் சொந்த ஊர் பீகார் மாநிலம். அவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இளங்கோவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வேதனை அடைந்தனர்.

    நேற்று முன்தினம் இளங்கோவனுக்கு பிறந்தநாள். எனவே அவர் மோட்டார் சைக்கிளில் மாணவியை ஏற்றிக்கொண்டு ஒன்றாக சுற்றினார். பின்னர் அவர்கள் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக காதலனிடம் மாணவி தெரிவித்தார்.

    எனவே ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்று கருதிய இருவரும் கட்டி பிடித்தபடி மின்சார ரெயில்முன் பாய்ந்தனர். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இளங்கோவன் பலத்த காயம் அடைந்தார்.

    மாம்பலம் ரெயில்வே போலீசார் இளங்கோவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இளங்கோவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    மாணவர் இளங்கோவனை அவரது தந்தை குமார், தாயார் லதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். குமார் கட்டிட தொழிலாளி ஆவார். லதா வீட்டு வேலை செய்து வருகிறார்.

    மகனின் நிலை பற்றி குமார் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். அன்று கல்லூரி விடுமுறை என்பதால் காலையிலேயே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான். வீட்டில் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக் வாங்கி வைத்திருந்தோம். இரவு வரை அவன் வீட்டுக்கு வரவில்லை.

    எனவே கேக் வெட்டுவதற்காக இரவு 9 மணிக்கு அவனுக்கு போன் செய்து அழைத்தேன். அப்போது போலீசார் தான் போனை எடுத்து பேசினார்கள். எனது மகன் ரெயிலில் அடிபட்டு படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்கள். உடனே பதறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கு அவன் அசைவின்றி கிடந்தான்.

    அவன் ஜிம்முக்கு போய் வாட்டசாட்டமாக இருப்பான். அவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்க நினைத்தேன். ஆனால் அவன் நிலை இப்படி ஆகிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

    காதல் பற்றி எங்களிடம் தெரிவித்து இருந்தால் சமாதானம் செய்து இருப்போம். அவன் எதையுமே சொல்லாததால் இப்படி ஆகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×