search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் மகளின் திருமணத்துக்கு வைத்திருந்த 17 பவுன் நகை திருட்டு
    X

    கூடலூரில் மகளின் திருமணத்துக்கு வைத்திருந்த 17 பவுன் நகை திருட்டு

    • கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மோட்டார் சைக்கிள்கள், மாடுகள், வாழைத்தார்கள் போன்றவை அடிக்கடி திருடு போய் வந்தன.
    • தற்போது வீடு புகுந்து நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 1-வது வார்டு பசும்பொன் நகரைச் சேர்ந்த சின்னச்சாமி மனைவி வனிதா (வயது 19). இவர் சொந்தமாக பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். தனது மகளின் திருமணத்துக்காக 7 பவுன் மதிப்பிலான நெக்லஸ் மற்றும் 10 பவுன் மதிப்பிலான காசுமாலை ஆகியவற்றை தனது வீட்டு பீரோவில் வைத்திருந்தார். சம்பவத்தன்று உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்து 17 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வனிதா கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் யார்? என்பது தெரியவில்லை. வீட்டு பீரோவை மாற்று சாவி போட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5.10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மோட்டார் சைக்கிள்கள், மாடுகள், வாழைத்தார்கள் போன்றவை அடிக்கடி திருடு போய் வந்தன.

    ஆனால் இது குறித்து கொள்ளையர்கள் யாரும் பிடிபடவில்லை. தற்போது வீடு புகுந்து நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறை உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×