search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்- பல்லாவரம் இ.கருணாநிதி பேச்சு
    X

    மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்- பல்லாவரம் இ.கருணாநிதி பேச்சு

    • ஏரி, நீர் நிலங்களை தவிர பயனற்ற நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.
    • கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மெய்க்கால் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பேசியதாவது:-

    மக்களின் குறை தீர்ப்பதில் தமிழ்நாட்டின் பங்கு பாராட்டத்தக்கது என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

    தமிழகத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் இணைய தளத்தில் வெப் சைட்டில்- ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அரசு நிலத்தில் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப பல ஏரிகள் குடியிருப்புகளாக மாறி விட்டன. எனவே அரசு இந்த சூழ்நிலையை உணர்ந்து நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும்.

    ஏரி, நீர் நிலங்களை தவிர பயனற்ற நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.

    எனது பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் கிராமத்தில் 693 பட்டாவும், பம்மலில் 2305, அனகாபுத்தூரில் 5660, திருநீர்மலையில் 29, ஜமீன் பல்லாவரத்தில் 394, அஸ்தினாபுரத்தில் 45, திருசூலத்தில் 1601 பட்டா என பல்லாவரம் தொகுதியில் மட்டும் 10 ஆயிரத்து 801 பட்டாக்கள் வழங்கப்படாமல் உள்ளது. அப்படி என்றால் 234 தொகுதிக்கும் எவ்வளவு இருக்கும்? இதை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

    கலைஞர் ஆட்சியின் போது காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழங்கப்பட்ட 25 ஆயிரம் பட்டாக்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கிராம பதிவேட்டில் ஏறவில்லை. இதனால் 12 வருடமாக பட்டாவை கிராம அடங்கலில் பதிவேற்றம் செய்ய கோரி மக்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

    அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மெய்க்கால் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். தொல்லியல் துறையில் பட்டா வழங்காமல் உள்ளது. 100 மீட்டர் தள்ளி இருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

    கலைஞர் ஆட்சியில்தான் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை முதலில் மெட்ரோ ரெயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தளபதி அப்போது நடந்தே வந்து அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    எனவே இப்போது மெட்ரோ ரெயில் எனது மீனம்பாக்கம் தொகுதியில் இருக்கிற காரணத்தால் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்.

    இவ்வாறு இ.கருணா நிதி பேசினார்.

    Next Story
    ×