search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாததால் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளிடம் கண்டிப்பு
    X

    மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாததால் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளிடம் கண்டிப்பு

    • திருவான்மியூரில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்து அவர் மனவேதனை அடைந்தார்.
    • இதனால் அங்கிருந்த அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடிந்து கொண்டார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1000 கிலோமீட்டருக்கு மேல் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறையின் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதல் இடமாக திருவான்மியூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த நிலையில், அடுத்ததாக பள்ளிக்கரணை பகுதியில் கால்வாய் இணைப்புக் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர்படுத்துவது, மதகுகளை ஒழுங்குபடுத்துவது, ஆகாயத்தாமரை அகற்றுவது போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    திருவான்மியூரில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்து அவர் மனவேதனை அடைந்தார்.

    இதனால் அங்கிருந்த அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடிந்து கொண்டார்.

    'நாம் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவில்லை என்றால் நிச்சயமாக நம்மால் பருவமழையை எதிர்கொள்ள முடியாது.

    எனக்கு தெரியாதா? உங்கள் துறையை பற்றி.... நீங்கள் மனசு வைக்கவில்லை. நீங்கள் மனசு வைத்திருந்தால் இந்த பணி எப்போதோ முடிந்திருக்கும். இது ஒரே நாளில் பந்தல் போடும் துறையல்ல, வேலையும் அல்ல' என கூறினார்.

    மீண்டும் 7-ந் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது பணிகள் சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கண்டிப்புடன் கூறினார்.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 11 இடங்களில் நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலர் இறையன்புடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.

    Next Story
    ×