என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரபாகரன் இருப்பதை குடும்பத்தினர் மூலம் உறுதிப்படுத்தினேன்- பழ.நெடுமாறன் விளக்கம்
- மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும்.
- பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.
உலக தமிழர் பேரியக்க தலைவர் பழநெடுமாறன் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறுவது இது முதல் தடவை அல்ல. ஏராளமான தடவை சிங்கள அரசும், சிங்கள ராணுவமும் அறிவித்திருக்கிறது. 1984, 1989, 2004, 2007-ம் ஆண்டுகளிலும் இவ்வாறு அறிவித்தது.
உலகம் பூராவும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையை குலைக்க வேண்டும். அவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
2009-ல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்ததில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் குழப்பம் உள்ளது. 2009-மே மாதம் 17-ந்தேதி அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரனும், முக்கிய தலைவர்களும் இறந்துவிட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.
அவருடைய உடல் போன்று ஒரு உடல் கிடைத்திருக்கிறது. அந்த உடலை நாங்கள் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். பரிசோதனை முடிவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் உடனடியாக இலங்கை அரசின் பாதுகாப்பு துறையின் செய்தித்தொடர்பாளர் அதை மறுத்துவிட்டார். முதல் நாளில் மறுத்த அவரே மறுநாள் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
மே 18 முள்ளிவாய்க்காலுக்கு சென்றபோது ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அதை நாங்கள் சூழ்ந்துகொண்டு சுட்டோம். அவர்களும் பதிலுக்கு சுட்டார்கள். சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் இருந்து குண்டுகள் பாயவில்லை அமைதியாயிற்று அதற்கு பிறகு சோதனை போட்டபோது அதில் பிரபாகரனின் உடலும், பொட்டு அம்மனின் உடலும் கிடைத்தது என்று அறிவித்தார்கள்.
அந்த 2 உடலும் மரபணு சோதனைக்காக அனுப்பி இருக்கிறோம் என்று சொன்னார்கள். இப்படி காலை 11 மணிக்கு அறிவித்தார்கள். 12.15 மணிக்கு அது பிரபாகரனின் உடல் தான் என்பது மரபணு சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவத்தின் தளபதியான பொன்சேகா அறிவித்தார். பிரபாகரனின் உடல் போன்ற ஒரு உடலின் படத்தையும், உடனே பத்திரிகை துறைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் வழங்கினார்கள்.
அப்போது சென்னையில் அரசாங்கத்தின் தடயவியல் துறையில் இருந்த டாக்டர் சந்திரசேகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு ஒரு தகவலை தெரிவித்தார். அவர் தான் ராஜீவ் குண்டு வெடிப்பில் இறந்தபோது சோதனை செய்து அறிவித்தவர். அவர் கூறும்போது, 'பிரபாகரனின் மரபணு மாதிரிகள் ஏற்கனவே சிங்கள ராணுவத்திடம் இருந்தாலும் உடனடியாக ஒரு மணி நேரத்தில் சோதனை செய்து அறிக்கை கொடுக்க முடியாது.
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 4 நாட்கள் தேவைப்படும். ஒரு மணிநேரத்தில் அறிவித்தது சந்தேகத்தை அளிக்கிறது. மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும். ஆனால் பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.
பிரபாகரனுக்கு அப்போது 54 வயது. அவரது முகத்தில் சுருக்கங்கள் உண்டு. ஆனால் அவர்கள் காட்டிய முகத்தில் சுருக்கங்கள் இல்லை. இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடல் கிடைத்தால் 1¼ மணிநேரத்தில் மரபணு சோதனை செய்ததாக சொல்வது அறிவியலை கொச்சைப்படுத்துவது என்றும் கூறினார்.
விடுதலை புலிகள் மரபுப்படி அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டால் உடனடியாக சயனைடு குப்பியை கடித்துவிடுவார்கள். கழுத்தில் சயனைடு குப்பி எப்போதும் இருக்கும். பிரபாகரன் சயனைடு குப்பியை கடித்தாரா என்பதற்கான குடல் சோதனை எதுவுமே நடத்தப்படவில்லை. அவர் கழுத்திலும் சயனைடு குப்பி எதுவும் இல்லை.
பிரபாகரனின் உடல் தான் என்று அவர்களுக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும், அந்த உடலை உடனடியாக கொழும்புவுக்கு கொண்டுபோய் சிங்கள மக்கள் பார்வைக்கு மட்டுமல்ல அங்குள்ள வெளிநாட்டு தூதர்கள் எல்லோரையும் அழைத்து, சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் காட்டி இருக்க வேண்டும்.
ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அது. சிங்கள மக்களுக்கு வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய வெற்றி. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரபாகரனின் உடல் கிடைத்தது. நாங்கள் உடனடியாக கடலில் வீசிவிட்டோம் என்று கூறினார்கள்.
வெற்றிபெற்றால் அவருடைய உடலை கொண்டு வந்து காண்பித்து மக்கள் நம்பும் படியாக அந்த செய்தி இருந்திருக்க வேண்டும். இப்போது அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் என்ன என்கிறார்கள்.
நான் அவர் இருக்கிறார் என்பதை மட்டும் தான் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அவர் எப்போது வருவார்? எப்போது அவர் தன்னுடையை மக்களுக்கு ஏதாவது அறிவிப்பார்.
அவருடைய முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். இப்போது அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து அதை உறுதி செய்திருக்கிறேன். என்னுடன் அவர் தொடர்பில் இல்லை. அவரது குடும்பத்தினர் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த உண்மையை கண்டறிவதற்காகத்தான் சிங்கள அரசும், இந்திய அரசின் உளவுத்துறையும் படாதபாடு படுகிறது.
அவர் நிச்சயம் வருவார். ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை தருவார். அப்போது பல்வேறு குழுக்களாக இருப்பவர்கள் ஒன்றுபடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் ஒற்றுமை உணர்வோடு அணி திரள்வார்கள்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை எந்த நாடும் இலங்கையில் கால்பதிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து பிரபாகரனும் எந்த உதவியையும் பெறுவதை தவிர்த்துவிட்டார். அவர்கள் இந்தியாவை நட்பு நாடாகத்தான் கருதினார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினையும் இந்தியாவுக்கு சீனாவால் வரும் அபாயமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. ஒன்றை தவிர்த்து இன்னொன்றை தீர்த்துவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்