search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்- பொதுமக்களிடம்  நூதன பணமோசடியில் ஈடுபடும் கும்பல்
    X

    திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்- பொதுமக்களிடம் நூதன பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

    • கோவையில் இருந்து ஜோத்பூருக்கு ஆடை உற்பத்தியாளரின் பெயருக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டதாக ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிவிடுகின்றனர்.
    • பெயர் விவரம், பார்கோடு, விமான விவரம், புறப்படும் இடம், சேருமிடம் என பார்ப்பதற்கு அச்சு அசலாக போலி விமான டிக்கெட் உள்ளது.

    திருப்பூர்:

    மோசடி ஆசாமிகள் புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றும் வித்தைகளை தெரிந்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை குறிவைத்து புதுவகை மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.

    அதன்படி மோசடியில் ஈடுபடும் மர்மநபர்கள் முதலில் ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ்அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் கிளைக்கு டீ- சர்ட் தேவைப்படுகிறது. உங்கள் நிறுவனத்தால் தயாரித்து தரமுடியுமா? என ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதற்காக வர்த்தகர்கள் விசாரணை செய்வது போல மர்மநபர்கள் கேட்கின்றனர். டீ- சர்ட் படம், தேவைப்படும் அளவு, நிறம், ஜி.எஸ்.எம்., என தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர். புது ஆர்டரை கைப்பற்றும் ஆர்வத்தில் ஆடை உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்புகின்றனர்.

    இதையடுத்து ஆடை தயாரிப்பு ஆர்டரை உறுதி செய்வதற்காக நீங்கள் நேரடியாக ஜோத்பூருக்கு வரவேண்டும். சலுகை கட்டணத்தில் நாங்களே விமான டிக்கெட் புக்கிங் செய்துதருகிறோம் என்கின்றனர். ஆடை தயாரிப்பு ஆர்டர்களை பெறுவதற்காக பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வர்த்தகர்களை நேரடியாக சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தேடிவரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற அடிப்படையில் கேட்கும் விவரங்களை அனுப்பிவைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

    அடுத்த சில நிமிடங்களில் கோவையில் இருந்து ஜோத்பூருக்கு ஆடை உற்பத்தியாளரின் பெயருக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டதாக ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிவிடுகின்றனர். பெயர் விவரம், பார்கோடு, விமான விவரம், புறப்படும் இடம், சேருமிடம் என பார்ப்பதற்கு அச்சு அசலாக போலி விமான டிக்கெட் உள்ளது.

    விமான டிக்கெட்டுக்கான கட்டண தொகை ரூ.7ஆயிரத்தை மட்டும் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள் என்று கூறி உற்பத்தியாளர்களை வேகப்படுத்துகின்றனர். பல ஆயிரம் ரூபாய் மதிப்பு ஆடைகள் தயாரிக்க ஆர்டர் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் சில ஆடை உற்பத்தியாளர்கள் தொகையை அனுப்பிவிடுகின்றனர். கணக்கில் தொகை வந்துசேர்ந்த மறுகணமே மோசடி ஆசாமிகள் ஆடை உற்பத்தியாளருடனான தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

    ஆடை உற்பத்தியாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிந்தாலோ தங்களை பற்றிய விவரங்களை துருவினாலோ தொகை அனுப்ப தாமதித்தாலோ உங்களுக்கு ஆர்டர் பெற விருப்பமில்லை. ஆர்டரை கேன்சல் செய்யவா? என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். அதுவரை அனுப்பிய உரையாடல்கள், விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் உடனேயே அழித்துவிடுகின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    பின்னலாடை உற்பத்தியாளர்களிடமிருந்து நூதன முறையில் பணம் பறிக்க ஒரு கும்பல் வலை விரித்து வருகிறது. ஆர்டரை எதிர்பார்த்து காத்திருக்கும் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தான் இந்த ஆசாமிகளின் இலக்கு. இணையதளங்களில் இருந்து செல்போன் எண், முகவரி விவரங்களை எளிதாக பெற்றுக்கொள்கின்றனர். வாட்ஸ்அப்பில் வர்த்தகர் போலவே உரையாடி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். பெரிய தொகை கேட்டால் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

    தொகையை இழந்தவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதனாலேயே போலி விமான டிக்கெட் அனுப்பி கட்டண தொகையாக ரூ.7ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை மட்டும் அனுப்பகோருகின்றனர். தினமும் 10 உற்பத்தியாளரை வீழ்த்தினாலும் இருந்த இடத்திலேயே 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சுருட்டிவிட முடியும். கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தியாளர்களை வலையில் வீழ்த்த முயன்றுள்ளனர். பல ஆடை உற்பத்தியாளர்கள் சுதாரித்துக்கொண்டு தப்பியுள்ளோம். சிலர் வலையில் சிக்கி தொகையை இழந்துள்ளனர். ஆர்டர் வழங்குவதாக ஆசைகாட்டி மோசடி செய்வோரின் வலையில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. உஷாராக செயல்படவேண்டும். விமான கட்டணம் உட்பட எதற்காகவும் எந்த ஒரு தொகையையும் அனுப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் ஆபாச செயலியை பதிவிறக்கம் செய்வோர் தங்களுக்கு வரும் அழைப்பை நம்பி கும்பல் சொல்லும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு வழிப்பறியை அரங்கேற்றும் கும்பல் அவர்கள் வெளியில் சொல்லாமல் இருக்கும் வகையில், அவர்களை ஆபாசமாக படமெடுத்து வீடியோவில் பதிவேற்றிக்கொண்டு அனுப்பிவைக்கிறது. இந்த செயலியை பதிவேற்றம் செய்த பலரை இதேபோன்று செல்போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் கூறும் இடத்துக்கு வரவழைத்து, பணம், உடைமைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் திருப்பூர் மாநகரம், மாவட்டங்களில் தொடர்கின்றன.

    போலீசார் கூறுகையில், இதுபோன்ற சில செயலிகளைப் பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். உடைமைகளை இழப்பவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள் என்பதால் கைவரிசை காட்டுகின்றனர். வாலிபர்கள் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்களது வாழ்க்கையை இழக்க வேண்டாம். இளம்பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகளை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். செயலிகள் மூலம் வழிப்பறி செய்பவர்கள் குறித்து தெரியவந்தால் போலீசாரிடம் தெரியப்படுத்துங்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×