search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலிகிராமத்தில் கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி
    X

    சாலிகிராமத்தில் கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி

    • பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் கே.கே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40) கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    வேல்முருகன் தினசரி பணி முடிந்து இரவு மது குடித்துவிட்டு வந்து வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதுபோதையில் வீடு திரும்பிய வேல்முருகனை வினோதினி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வேல்முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றும் வினோதினி கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வினோதினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து வினோதினி போலீசாரிடம் கூறியதாவது:- கணவர் வேல்முருகன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டை அசுத்தம் செய்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த நான் கணவரை கத்தியால் குத்தினேன். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

    மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து நானே சிகிச்சை அளித்தேன். ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்ததால் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×