search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயிலுக்காக அடையாறு ஆற்றில் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது
    X

    மெட்ரோ ரெயிலுக்காக அடையாறு ஆற்றில் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது

    • கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூ.61,843 கோடி செலவில் 3 வழித் தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதில் மாதவரம்-சிப் காட் இடையேயான வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. கிரீன் வேஸ் சாலையை அடையாறு பகுதியுடன் இணைக்க இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    4 மாதங்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக காவேரி எனப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அடுத்து அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சவாலான பணியில் ஈடுபட நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும்.

    மற்ற 2 எந்திரங்கள் மந்தவெளியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும். இதில் காவேரி என்ற எந்திரம் மட்டும் 150 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கீழ் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும்.

    ஆற்றுபடுகையின் மட்டத்தில் பொதுவாக சிறிய மாறுபாடு இருப்பதாலேயே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க கடினமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுரங்கம் தோண்டும் எந்திரத்தில் அழுத்த அளவுகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

    ஆற்றுப்படுகையின் ஆழம் சுமார் 3 முதல் 5 மீட்டர் ஆகும். அதற்கு கீழே 11 முதல் 13 மீட்டர் வரை துளையிட வேண்டும். இதன் மூலம் ரெயில் மட்டம் 18 மீட்டர் ஆக இருக்கும். அதற்கு ஏற்ப கவனமாக அளவிட்டு சுரங்கம் தோண்ட வேண்டும்.

    அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் போது இதில் மாறுபாடு காணப்படலாம் என அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் சில வாரங்களில் ஆற்றுப்படுகையை அடையும்.

    சவாலான சூழ்நிலைகள் காரணமாக இந்த சுரங்கப் பாதை பணிகளை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×