என் மலர்tooltip icon

    தேனி

    • சோத்துப்பாறை அணை 126.28 என அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
    • ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்கிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல சிற்றாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் மூல வைகை ஆறாக வாலிப்பாறை தும்மக்குண்டு, முறுக்கோடை, வருசநாடு, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அமச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் சேர்ந்தது.

    மேலும் முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியாக உயர்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நீர்மட்டம் 69.05 அடியாக இருந்தபோது 4738 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5605 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

    மேலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்பதால் அதிகாரிகள் 5 மாவட்ட கலெக்டர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சோத்துப்பாறை அணை 126.28 என அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 252.37 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. நீர் வரத்து 75 கன அடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகா நதி அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 34 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு அணை 13.6, சோத்துப்பாறை 26.2, பெரியகுளம் 15.4, வீரபாண்டி 8.4, ஆண்டிபட்டி 5.2, அரண்மனைபுதூர் 4, வைகை அணை 3.6, உத்தமபாளையம் 4.2, தேக்கடி 5.8, சண்முகா நதி அணை 3.8, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 62 அடியில் இருந்து 67.09 என 5 அடி உயர்ந்தது.
    • கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஆண்டிபட்டி, வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, தூவானம் அருவி, கம்பம் உத்தமபாளையம், கூடலூர், தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக முல்லைப்பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் வீரபாண்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் மேல்மட்ட பாலங்களில் சாலையை ஒட்டி தண்ணீர் சென்றது. மேலும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்ததால் நீர்வரத்து ஓரளவு சீரானது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 62 அடியில் இருந்து 67.09 என 5 அடி உயர்ந்தது. இதனால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வைகை ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 68.50 அடியை எட்டியதும் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும்.

    நீர்வரத்து 13081 கன அடியாக உள்ள நிலையில் 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 5109 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 11892 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு உபரியாக 9403 கன அடி நீர் திறக்கப்பட்டு வண்டி பெரியாறு சப்பாத்து உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 139.35 அடியாக உள்ளது. விரைவில் 140 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 6962 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.20 அடியாக உள்ளது. 80.20 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகா நதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. 69 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று வரை நீர்வரத்து சீராகாததால் 9-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, மேகமலை அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 4.6, வீரபாண்டி 4.2, சோத்துப்பாறை 2.6, வைகை அணை 2, போடி 7.4, உத்தமபாளையம் 6.2, கூடலூர் 41.4, பெரியாறு அணை 6.6, தேக்கடி 26.4, சண்முகா நதி 2.6 என மொத்தம் 114.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வயல்களுக்கும் தண்ணீர் சென்றதால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    • சுமார் 30 ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் முற்றிலும் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், குச்சனூர், கூலையனுர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்கு கரைகளை உடைத்து கொண்டு கட்டுக்கடங்காத வெள்ளம் வயல்வெளிக்குள் சீறிப்பாய்ந்ததால் உலகநாதன் என்பவருக்கு சொந்தமான 5000 வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அருகில் உள்ள வயல்களுக்கும் தண்ணீர் சென்றதால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    மேலும் அறுவடைக்கு காத்திருந்த சுமார் 30 ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் முற்றிலும் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது. ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ளத்தினால் மயான எரியூட்டு மையம் நீரில் மூழ்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெள்ள பெருக்கால் கரைகள் உடைப்பெடுத்து மேலும் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • பாதிக்கப்பட்ட இடங்களை தங்கதமிழ்செல்வன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கூடலூரில் விடிய விடிய பெய்த மழை காரணமாக தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது முதல் பலத்த மழையாக பெய்யத் தொடங்கியது.

    மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    கம்பம்-சுருளிபட்டி சாலையில் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி முடிவடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் இந்த மழையால் சேதம் அடைந்துள்ளன. 18-ம் கால்வாய், ஏகலூத்து ஓடைப்பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடத்தில் தங்க வைத்தனர்.

    சுருளிபட்டி, முல்லைப்பெரியாற்றின் கரையையொட்டியுள்ள பகுதியில் ஆட்டு கிடை அமைத்திருந்த லட்சுமணன் என்பவர் தீபாவளி பண்டிகைக்காக 60க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். இந்த ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் அருகே தேங்காய் குடோன் அமைத்திருந்த விவசாயியின் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேவாரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும், தீபாவளி வியாபாரத்திற்காக வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களை தங்கதமிழ்செல்வன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கூடலூரில் விடிய விடிய பெய்த மழை காரணமாக தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூடலூர் கள்ளர் வடக்கு தெருவில் கனமழையின்போது சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இங்குள்ள சிறுபுனல் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் கொண்டு 3 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இங்கு குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர்கள், ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    தேனி மாவட்டத்தில் கடந்த 1992-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள், விவசாயிகள் வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகி உள்ளன. மேலும் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள் வைத்திருந்த பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது.
    • கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன.

    வருசநாடு, அக்.18-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. இதேபோல் போடியில் உள்ள முக்கிய நீர்பாசன குளங்களான பங்காறுசாமி குளம், செட்டிக்குளம், சங்கரப்பன்கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் ஆகியவற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. போடி மெட்டு, குங்கரணி, பீச்சாங்கரை, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கொட்டக்குடி ஆறு, கொம்புதூக்கி ஆறு ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த தடுப்பணை பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேணடாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பணை பகுதிக்கு செல்லகூடும் என்பதால் அங்கு தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருஷநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் தேனி வருசநாடு சாலையில் பல்வேறு இடங்களில் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி இருந்த தண்ணீர் சிறிதளவு வடியத் தொடங்கியதும் வாகனங்கள் தண்ணீருக்குள் மெதுவாக சென்றது.

    இது தவிர வருஷநாடு முதல் கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பி காட்சியளித்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில் முல்லையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டிரான்ஸ்பார்மர், குடிசை வீட்டை சூழ்ந்த வெள்ளம்.

     

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய 2 நாட்களிலேயே வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் மழை அதிகரித்து வைகை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேகமலை, சிங்கராஜபுரம், குமணன்தொழு ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த 64 கிராமங்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் 64 கிராம மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்றபிறகுதான் குழாய்கள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வைகை அணைக்கு நேற்று 1319 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று காலை 12589 கன அடி நீர் வருவதால் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஒருசில இடங்களில் கரையோரம் உள்ள வயல்களுக்குள்ளும் தண்ணீர் சென்று விட்டது.

    71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 62.47 அடியாக உள்ளது. அணைக்கு 12 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் விரைவில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டியவுடன் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கனமழை காரணமாக பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 2375 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5071 மி.கனஅடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 1307 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3995 மி.கனஅடியாக உள்ளது.

    126.26 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.17 அடியாக உள்ளது. ஒரே நாளில் 16 அடிவரை நீர்மட்டம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து 80 கனஅடியாகவும். நீர் திறப்பு 3 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 63.55 கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடி, வரத்து 14 கனஅடி, இருப்பு 165.30 மி.கனஅடி.

    கனமழை காரணமாக பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தடை தொடர்கிறது. இதேபோல் மேகமலை அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி சமயத்தில் பெய்து வரும் மழையால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்து வரும் நிலையில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரியகுளம் 12, வீரபாண்டி 6.4, சோத்துப்பாறை 9.4, போடி 14.2, உத்தமபாளையம் 2.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 8, தேக்கடி 6.4, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது.
    • இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷனம் நிலவி வருகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மூலவைகை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தற்போதே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1074 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1499 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3969 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை 76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 86.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 112 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து 1424 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 4837 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.10 அடி. வரத்து 14 கன அடி. இருப்பு 161.64 மி.கன அடி.

    ஆண்டிபட்டி 6, அரண்மனைபுதூர் 13.8, வீரபாண்டி 17.2, பெரியகுளம் 18, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2.2, வைகை அணை 20, போடி 3.2, உத்தமபாளையம் 5.2, கூடலூர் 8.4, பெரியாறு அணை 13.6, தேக்கடி 58.6, சண்முகாநதி அணை 14.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 4-ம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நேற்று கம்பம் வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

    • மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

    இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    • கடந்த சில நாட்களாகவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
    • மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்டமனூர்-வருசநாடு சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

    இதே போல சாலையில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல தேங்கியது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக கிராமங்களில் வெப்பம் தணிந்து குளுமையான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்றும் மழை பொழிவு இருக்கும் என பொதுமக்கள், விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.

    கனமழை காரணமாக மேகமலை அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்ததால் அவர்களை வனத்துறையினர் உடனடியாக வெளியேற்றினர்.

    இன்றும் அருவியில் அதிக அளவு நீர் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அதில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தேவாரத்தில் இருந்து போடிவரை விரிவாக்கம் செய்யப்பட்ட 18ம் கால்வாய் சேதமடைந்து 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.
    • இலவசம் பஞ்சு மெத்தை, தலையணைகள் ஆகியவற்றிற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் வெவ்வேறு கருத்துகள் பலரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசியல் தேவையில்லை என்பதே எனது கருத்து. அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை அளிக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே முடிவில் உண்மை வெளிவரும் என நம்புவோம்

    தேவாரத்தில் இருந்து போடிவரை விரிவாக்கம் செய்யப்பட்ட 18ம் கால்வாய் சேதமடைந்து 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மூலம் கடைமடை வரை நீர் வந்து விவசாயிகள் பயனடைந்தனர். தற்போது சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இலவசம் பஞ்சு மெத்தை, தலையணைகள் ஆகியவற்றிற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். போடியில் 48 பஞ்சு பேட்டைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 8 மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பியுள்ளவாகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என்றார்.

    • மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள மக்களை சிலர் அச்சுறுத்தி வருகின்றனர்.
    • கேரள வக்கீலுக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பேபி அணையை பலப்படுத்தி பின்னர் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தபோதிலும் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுப்பதற்கான தொடர் முயற்சியில் கேரளா ஈடுபட்டு வருகிறது.

    மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள மக்களை சிலர் அச்சுறுத்தி வருகின்றனர். வக்கீல் ரசூல்ஜோய் என்பவர் சேவ் கேரளா பிரிக்கேட் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பெரியாறு அணைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    அணை உடைவது போன்று கிராபிக் காட்சிகளை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார். மேலும் அணை உடைந்தால் லட்சக்கணக்கான கேரள மக்கள் பலியாவார்கள் என சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரசூல்ஜோய் அணையை உடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக அணையின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய வேண்டும். சர்வதேச நிறுவனத்தை வைத்து ஆய்வு நடத்த வேண்டும். அணை பாதுகாப்பானது என்ற அறிக்கை தவறானது என்றும், அதற்கு தங்களிடம் ஆதாரதம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழு ஆய்வு செய்த பின்னர் அணை பலமாக உள்ளது. 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது கேரள வக்கீல் அதற்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வரும் கேரள வக்கீல் ரசூல்ஜோய் நடத்தி வரும் சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பை தடை செய்யும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் அவர் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் மத்திய கண்காணிப்புக் குழு, துணை காண்காணிப்புக் குழு ஆகியவை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என அறிக்கை கொடுத்துள்ளது. இருந்த போதிலும் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
    • தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீரின் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம். ஆய்வுப்பணிக்காக உச்சநீதிமன்ற வழிபாட்டுதல்படி 3 பேர் கொண்ட முதல் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த வந்தனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதி களாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

    கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்கு வந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர்வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக உள்ளது. வரத்து 1156 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5586 மி.கன அடியாக உள்ளது.

    துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆய்வுக்குழு கூட்டம் முறையாக நடத்தி அறிக்கை அளிக்கப்படுவதில்லை. எனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டு காலமாக வைக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×