என் மலர்
தூத்துக்குடி
- கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
- விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாநகரை ஒட்டிய பகுதிகளான கோரம் பள்ளம் காலங்கரை மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு, தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படா ததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை, கோரம்பள்ளம், அந்தோணி யார்புரம், காலங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாக காலங்கரை கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி குமரன் நகர், முருகன் தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இதேபால தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டிய கனமழையால் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும் சிவன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
- விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் குவிந்தனர்.
கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டதால் தகராறு.
- உறவினருக்கு ஆதரவாக மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கத்திக்குத்து.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேச செல்வன் (வயது 41). ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.
அவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று சிவனேச செல்வன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகனான பிளஸ்-1 படிக்கும் அர்ஜூன் (16) என்பவர் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் அர்ஜூன் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன் தனது மோட்டார் சைக்கிளின் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜூனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூன் படுகாயம் அடைந்தார்.
அர்ஜூனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவனேச செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை நடத்தினார்.
- தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே 'மரங்களின் மாநாடு', அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் 'மலைகளின் மாநாடு'ஆகியவற்றை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
தூத்துக்குடி :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது?
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
* தேர்தல் வருவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது.
* துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
* கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜயே முதல் காரணம்.
* காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தே பேச்சை தொடங்கினார் விஜய்.
* 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லையே.
* இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை இந்த முறை எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது.
* எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். எங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பத்தாம் நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.
உடன்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
இந்நிலையில், பத்தாம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.
அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் நடை திறந்தது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான தசரா குழுவினர் நேற்று இரவு வரை மேளவாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் வந்து காப்புகட்டி சென்றனர்.
இன்றும் தசரா குழுவினர் வந்து காப்புகட்டி சென்றனர். சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.
இன்று கோவில் கலை அரங்கத்தில் மாலை 3 மணிமுதல் ஆசிரியர் பெருமாள், கிஷோர் சமய சொற்பொழிவு, நடனம், பரதநாட்டியம், தொடர்ந்து இரவு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கிறார்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வாளர் முத்துமாரியம்மாள் அறங்காவலர் குழுத்தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
- தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தூத்துக்குடி தருவைகுளத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களை மட்டும் நம்பி தேர்தல் களத்துக்கு வந்த ஒரே தலைவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார். ஜூலை 7-ந் தேதி தொடங்கி இன்று 154-வது தொகுதியாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இது எதை காட்டுகிறது என்றால் மக்கள் மீது உள்ள நம்பிக்கை அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு என்பதை தான் காட்டுகிறது.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட கூட்டணி வரலாம். சேரலாம். இருக்கின்ற கூட்டணிகள் கூட பிரியலாம். ஆனால் மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி மக்களை சந்திப்பதற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பகுதியில் நடந்த அ.தி.மு.க. பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.
மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே 2-வதுஇடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவது என்று தான் போட்டி உள்ளது.
டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
4 ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமியை மக்கள் அடுத்த முதலமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால் தான் தெரியும் என்பது போல அ.தி.மு.க. ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய தொடங்கி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை தி.மு.க.வின் தவறை சுட்டிக்காட்டவில்லை. நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை. கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வப்பெருந்தகைக்கு அ.தி.மு.க. பற்றி பேச அருகதை இல்லை.
காங்கிரஸ் கட்சியை தி.மு.க. விழுங்க பார்க்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
- கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன்.
இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் அவரது மகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை தடுத்து நிறுத்தி வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிருக்கு பயந்து வண்டியை கீழே போட்டு விட்டு அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்துள்ளார்.
ஆனாலும் அந்த கும்பல் விடாது துரத்தி மரக்கடைக்குள் சென்று மணிகண்டனை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.
இக்கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டி படுகொலை செய்ததாக சிறுமியின் தந்தை நட்டார் (48), தம்பி உட்பட 4 பேரை தாலுகா போலீசார் நேற்று இரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






