என் மலர்
திருப்பூர்
- பஞ்சலிங்க அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
- அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பஞ்சலிங்க அருவியில் இன்று காலை குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
மேலும் தொடர் மழையால் 90 அடி உயரமுள்ள உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை நெருங்கி உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதே போல கல்லாபுரம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.
அமராவதி அணை ஏற்கனவே நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாகவும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததாலும் நீர்மட்டம் குறைந்து வந்தது. 70 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்ற நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்கியதும் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.
தற்போது படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . மேற்கு தொடர்ச்சி மலையில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.
அணையில் இன்று நீர்மட்டம் 74.37 அடியாக உள்ளது. 672 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அமராவதி அணை முழு கொள்ளளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியதால் பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
- இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்க சந்தையை அதிகம் நம்பி உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத அதிகப்படியான வரி விதிப்புக்கு பிறகு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆடை அனுப்புவதில் தேக்கம் நிலவி வர்த்தக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
அமெரிக்காவுடன் மத்திய அரசு வர்த்தக பேச்சுவார்த்தையை ஒருபுறம் தொடர்ந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 4-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் ஐரோப்பிய நாட்டுக்கு இந்தியாவில் இருந்து ரூ.37 ஆயிரத்து 600 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருவதால், இதை சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பா சந்தையை கைப்பற்றும் முனைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
- மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி .வேலுமணி பங்கேற்று பேசியதாவது:-
எஸ்.ஐ.ஆர். என்று அறிவித்ததுமே தி.மு.க.வினர் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். அ.தி.மு.க.வை பொறுத்த அளவில் என்றைக்குமே நேர்மையாக தேர்தலை சந்திப்போம். கள்ள ஓட்டு போடுவதெல்லாம் இருக்காது. அ.தி.மு.க.வுக்கு சாதகமான வாக்குகள், பொதுமக்கள் வாக்குகள் சரியான முறையில் சேர்க்க வேண்டும்.
தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். தமிழ்நாடு முழுவதுமே தி.மு.க. ஆட்சி போய்விடவேண்டும். அ.தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என ஒட்டுமொத்த குரலாக உள்ளது.
இந்த முறை திருப்பூரில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சர்வே வைத்துள்ளேன். தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தி.மு.க.விற்கு எப்பவும் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் கூட இந்த ஆட்சி வேண்டாம் என கூறுகிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி. இதுவரையிலும் தி.மு.க. ஆட்சிக்கு இவ்வளவு கெட்ட பெயர் வந்ததில்லை. அவ்வளவு கெட்ட பெயருடன் தி.மு.க. ஆட்சி உள்ளது.
ஒரு முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மறுமுறை நிச்சயம் மிக படுதோல்வி அடையும் என்பதுதான் சரித்திரம் என்றார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15ந்தேதிக்குள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
- வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
- வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
அவினாசி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி அவினாசியில் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவினாசி வாணியர் வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், பூர்த்தி செய்யப்பட்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது குறித்து பார்வையிட்டதுடன் ஆலோசனைகள் வழங்கினார்.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பிற தாலுகாக்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். அவருடன் கலெக்டர் மணிஷ் நாரணவரே , அவினாசி தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜபிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.
- கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 51.16 அடியாக உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.
எனவே பாலாற்றின் கரையோரத்தில் உள்ள தேவனூர் புதூர், பொன்னாலம்மன் சோலை, தீபாலப்பட்டி, அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருமூர்த்தி அணை நீர்வளத்துறை உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடுகள் நடைபெறுவதை கண்டித்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம். எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார் , முன்னாள் எம்.பி., சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் கவுன்சிலர் தங்கராஜ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம்
குடிமங்கலம்:
ஆலமரத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன் புதூர், கொங்கல்நகரம்,
கொங்கல்நகரம் புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டம்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை, உடுமலை மின்பகிர்மான செயற்பொறியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.
- அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகள் செல்வது தடை விதிக்கப்படுவது நடைமுறை, கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருமூர்த்தி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. மேலும் பஞ்சலிங்க அருவியின் மேற்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சீரான அளவில் தண்ணீர் வந்ததை அடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.
- கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
- அலுவலக அறைகள், கழிவறைகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீசார் குழு மோப்பநாய், புல்லட் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
- அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அவினாசி:
தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
இந்தநிலையில் பீகார் தேர்தலின்போது, பீகார் மக்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பொய் பிரசாரம் செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்ட இணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வம் தலைமையில் சிலர் தயாராகி வந்தனர்.
இதையறிந்த அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள்- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்
கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






