என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![விதிமுறைகளை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை விதிமுறைகளை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/09/1895084-tn-government.webp)
விதிமுறைகளை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது.
- உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 ன்படி அகற்றப்பட வேண்டும்.
சென்னை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ன்படி திருத்தப்பட்ட 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 ன்படி அகற்றப்பட வேண்டும்.
அதேபோல், உரிமக்காலம் முடிந்தபின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பாதகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-P-ன்படி அகற்றப்பட வேண்டும்.
மேற்படி பிரிவுகள் 117-O, 117-P ஆகியவற்றின்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றத் தவறினால், அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றி விடும். பின்பு, அதற்கான செலவினம் பிரிவுகள் 117-O, 117-P மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விதிகள் 322, 341-ல் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும் உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.