search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்? - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
    X

    சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்? - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

    • பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராக களமாட நினைத்தார்கள்.
    • பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ராமதாஸ், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. 2015-ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார்.

    ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார். இந்த உண்மைகள் ராமதாஸ் அவர்களுக்குத் தெரியும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசை ஆணைக் கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாசுக்குப் புரியவில்லையா? இல்லை புரியாமல் நடிக்கிறாரா?

    செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார். அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார்.

    பா.ஜ.க.வில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள். அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும்.

    1989 ஜூலை 16-ந்தேதி நினைவிருக்கிறதா? அன்று தான் டாக்டர் ராமதாஸ் 5 சத்தியங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான், 'என் வாரிசுகள் கட்சியில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார்கள்' என்றார்.

    இப்போது அன்புமணி கட்சியின் கடைக்கோடி உறுப்பினரா? 'சத்தியம் தவறாத உத்தமர் போல' நடிக்கும் ராமதாஸ் எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடுவார். ஏன் அமலாக்கத்துறையின் அடாவடிகளைக் கண்டித்து அறிக்கை விடத் தயங்குகிறார்?

    மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாசுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

    "ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது, அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது'' என முன்பு ராமதாஸ் சொன்னார். அந்த பினாமிகளோடுதான் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி வைத்தார். பா.ம.க-வின் பாவங்களை கழுவிவிட்டு, வந்து ராமதாஸ் திமுகவை விமர்சிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×