search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
    X

    பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×