search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறையையொட்டி தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    தொடர் விடுமுறையையொட்டி தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

    • சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
    • திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர்.

    தென்காசி:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் திங்கள் கிழமை விடுமுறை எடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, தென்மா வட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறப்பு ரெயிலை தாம்பரம்-நெல்லை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்க இருக்கிறது.

    சென்னை முதல் நெல்லை வரை ஒரு வழிபாதை இருக்கும்போதும் ஒரே சிறப்பு ரெயில் தான் இயக்கப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் சூழலிலும் ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்குவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், சரியான நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். அப்படியும் இணைய தளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன.

    இதனால், தட்கல் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு மையங்களில் காத்திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரெயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    இதுகுறித்து தென்காசியை சார்ந்த ரெயில் பயணிகள் கூறுகையில்,

    தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் ஒரே ஒரு ரெயிலை மட்டும் இயக்குவது வேதனை அளிக்கிறது.

    சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படும் நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழ மைகளில் சென்னையில் காலியாக இருக்கும் ரெயில் பெட்டிகளை பயன்படுத்தி தாம்பரத்திலிருந்து மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் சுதந்திர தினம் முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய் கிழமை நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

    தற்போது சென்னை- நெல்லை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என்பதால் சிறப்பு ரெயில்கள் அதிகமாக இயக்க முடியும். எனவே பயணிகளின் நலன் கருதி தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×