search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    பாதி வழியில் நின்றுபோன ரெயிலை ராணுவ வீரர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்தார்களா? உண்மை இதுதான்!
    X

    பாதி வழியில் நின்றுபோன ரெயிலை ராணுவ வீரர்கள் தள்ளி ஸ்டார்ட் செய்தார்களா? உண்மை இதுதான்!

    • சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
    • வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபியின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.

    பல சமயங்களில் சாலையில் திடீரென நின்றுபோன வாகனங்களை பலர் பின்னால் ஒன்றுகூடி தள்ள, என்ஜின் ஸ்டார்ட் ஆவதை பார்த்திருக்கிறோம். அதேபோன்று ரெயிலை தள்ளுவதுபோன்ற ஒரு வீடியோ கடந்த இரு நாட்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராணுவ வீரர்கள், போலீஸ் குழுக்கள், ரெயில்வே ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து ஒரு ரெயிலை தள்ளுவது தெரிந்தது.

    பல ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்ததால் டுவிட்டரில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது. நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றி சென்ற இந்திய ரெயில்வேயின் ரெயில் எதிர்பாராதவிதமாக நடுவழியில் நின்றுவிட்டதாகவும், அதன் பயணத்தைத் தொடர அனைவரும் தள்ளவேண்டியிருந்ததாகவும் வீடியோவை பகிர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டனர். சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

    இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் தேடியபோது அந்த வீடியோவுக்கும் பரப்பப்படும் தகவலுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

    பயணிகளுடன் சென்ற அந்த ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ரெயிலின் மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் தடுப்பதற்காக அனைவரும் செய்த முயற்சியைத்தான் திரித்து பொய் செய்தியாக பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    ஜூலை 7, 2023 அன்று, ஹவுரா-செகந்திராபாத் வழித்தடத்தில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தீப்பிடித்தன. மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்க, 3 பெட்டிகள் கொண்ட பின்பகுதியை உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் பிரிக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து தள்ளி நகர்த்தி உள்ளனர். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளை பிரிக்க, மக்கள் ரெயிலை தள்ளுவதைத்தான் வீடியோ காட்டுகிறது. வீடியோவில் உள்ளவர்கள் மற்றொரு இயந்திரம் வரும் வரை காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    நின்றுபோன ரெயிலை ராணுவ வீரர்கள் இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்ததாக வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபி-யின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.

    இது குறித்து பேசிய ரெயில்வே அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, "ஜூலை 7 ஆம் தேதி ரெயில் எண் 12703 தீ விபத்தின் போது ரெயிலின் பின்பக்க பெட்டிகளை தீயிலிருந்து காக்க, ரெயில்வே பணியாளர்களும் உள்ளூர் போலீசாரும் கைகோர்த்து பிரித்தனர். உடனடியாக செயலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி"என கூறினார்.

    இதே கருத்தை வெளியிட்டு தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் உண்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

    எனவே, நின்று விட்டதால் ரெயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் செய்தி உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×