search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    வாக்னரை பலி கொண்ட விமான விபத்து காட்சி உண்மையா?
    X

    வாக்னரை பலி கொண்ட விமான விபத்து காட்சி உண்மையா?

    • ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
    • கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.

    இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.

    இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.

    ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.

    ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    Next Story
    ×