search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமி கடத்தல் விவகாரம்: தந்தையின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை
    X

    சிறுமி கடத்தல் விவகாரம்: தந்தையின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

    • சிறுமியை விசாரித்தபோது, தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இருந்ததாக தெரிவித்தார்.
    • ரெஜி பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆயூர் பயப்பள்ளியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா (வயது 6). கடந்த 27-ந்தேதி மாலை டியூசன் வகுப்புக்கு சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், சிறுமியை விடுவிக்க கடத்தல் கும்பலினர் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசினர். போனில் பணம் கேட்டு மிரட்டியது பெண் என்பதால் போலீசார் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மறுநாள் கொல்லம் ஆசிராமம் பகுதியில் உள்ள மைதானம் அருகே சிறுமி தனித்து நிற்பதாக தகவல் கிடைத்தது. அவரை மீட்ட போலீசார், சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை இங்கு ஒரு பெண் விட்டுச்சென்றதாகவும், உனது தந்தை வந்து விடுவார் என அவர் கூறிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலை பிடிக்க கேரள போலீஸ் டி.ஐ.ஜி. நிசாந்தினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி அபிகேல் சாராவிடம் விசாரித்தபோது, தன்னை அடைத்து வைத்திருந்த வீட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இருந்ததாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் 3 சந்தேக நபர்களின் ஓவியங்களை போலீசார் வெளியிட்டனர். அவர்களது நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் 94979 80211 என்ற எண்ணுக்கு தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தினர்.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக சிறுமி அபிகேல் சாராவின் தந்தை ரெஜியை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ரெஜி, பத்தனம்திட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். மேலும் ஐக்கிய செவிலியர் சங்கத்தின் பத்தனம்திட்டா மாவட்ட பிரிவின் தலைவராகவும் உள்ளார்.

    எனவே செவிலியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் காரணமாக சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக ரெஜி கூறுகையில், போலீசார் என்னிடம் விசாரித்தனர். ஆனால் செல்போனை பறிமுதல் செய்யவில்லை. வீட்டில் குழந்தைகள் கேம் விளையாடுவதை தடுக்க வைத்திருந்த போனை அவர்கள் கைப்பற்றி உள்ளனர் என்றார்.

    Next Story
    ×