search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?
    X

    கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?

    • குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது
    • குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன் ஜோனதானுடன் டியூசன் வகுப்புக்கு சென்றபோது, நேற்று முன்தினம் காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

    கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியை விடுவிக்க ரூ.15 லட்சம் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் சிறுவன் ஜோனா தெரிவித்த அடையாளங்களை வைத்து கடத்தல் நபரின் படத்தை வரைந்து அதனை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இந்த சூழலில் நேற்று மதியம் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் கடத்தப்பட்ட சிறுமி அபிகேல் சாரா ரெஜினா தனித்து நின்றார். இதனை பார்த்த கல்லூரி மாணவ-மாணவிகள் சிலர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் தான் கடத்தப்பட்ட அபிகேல் சாரா ரெஜினா என தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    முன்னதாக போலீசார் அவரை விசாரித்தபோது, இரவில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் தன்னை ஒரு பெரிய வீட்டில் தங்க வைத்ததாகவும், நேற்று பகல் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் தன்னுடன் வந்த பெண் இறக்கி விட்டதாகவும், அந்த பெண் மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

    சிறுமியை மீட்ட மாணவ-மாணவிகள் கூறுகையில், நாங்கள் தேர்வு எழுதி விட்டு வரும்போது சிறுமி தவிக்கும் நிலையை கண்டோம். அவள் சோர்வாக இருந்ததால் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். அப்போது அந்த பகுதியில் இருந்து மஞ்சள் சுடிதார் அணிந்து வெள்ளை சால்வையால் முகத்தை மூடிய ஒரு பெண் புறப்பட்டுச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமி தாயுடன் இருக்கும் காட்சி.

    எனவே அவர் தான் சிறுமி அபிகேல் சாரா ரெஜினாவை அங்கு விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர் சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்ட ப்பட்டவர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடி வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், அவரது உறவுக்காரர் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சூழலில், கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 62 குழந்தைகள் மாயமாகி உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர்களில் 43 பேர் சிறுவர்கள், 19 பேர் சிறுமிகள். குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் சில வழக்குகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவற்றை முடித்து வைக்க கோர்ட்டுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போலீசார் இன்னும் சில வழக்குகளை கண்டுபிடிக்கவில்லை. ஓயூரை சேர்ந்த சிறுமி அபிகேல் சாரா ரெஜினா கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்தியது போல் அனைத்து வழக்குகளிலும் போலீசார் செயல்பட வேண்டும் என்றார்.

    கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் ஆலப்புழாவில் 7 வயது சிறுவன் ராகுல் கிரிக்கெட் விளையாடியபோது கடத்தப்பட்டுள்ளான். இதனை தற்போது நினைவுகூர்ந்த அவனது தாயார் மினி ராஜூ, சிறுமி அபிகேல் சாரா ரெஜினா மீட்கப்பட்டது சந்தோஷம் தருகிறது. குறைந்தபட்சம் ஒரு தாயின் கண்ணீராவது துடைக்கப்பட்டிருப்பதில் நான் நிம்மதி அடைகிறேன். என் மகனுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. அவன் விஷயத்தில், தற்போது செயல்பட்டதுபோல் அனைவரும் அர்ப்பணிப்பு காட்டியிருந்தால், ராகுலை கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவனது வழக்கின் விசாரணை உள்ளூர் அளவிலேயே முடிந்து விட்டது என்றார். இருப்பினும் தன் மகன் உயிருடன் இருப்பார். ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    Next Story
    ×