search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் கணிப்பு
    X

    குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் கணிப்பு

    • பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.
    • சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள்.

    ஆமதாபாத் :

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் எனது கணிப்புகள் பலித்துள்ளன.

    உங்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கணித்துக்கூறுகிறேன். குறித்துக்கொள்ளுங்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எனது கணிப்பு குஜராத்திலும் நன்றாகவே பலிக்கும்.

    27 ஆண்டு கால தவறான ஆட்சிக்குப்பின், குஜராத் இந்த மனிதர்களிடம் இருந்து (பா.ஜ.க.) விடுபடப்போகிறது.

    (குஜராத் தேர்தல் பற்றிய தனது கணிப்பை கெஜ்ரிவால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி நிருபர்களிடம் காட்டினார்.)

    பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள அரசு ஊழியர்கள், எங்கள் கட்சி ஆட்சி அமைக்க உதவுங்கள்.

    ஜனவரி 31-ந் தேதிக்குள் குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கையை நாங்கள் வெளியிடுவோம். நான் சும்மா சொல்லவில்லை. பஞ்சாப்பில் நாங்கள் அப்படி அறிவிக்கை வெளியிட்டுள்ளோம்.

    பிற ஒப்பந்த பணியாளர்கள், போலீசார், மாநில போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தர ஊதியம், பணி நிரந்தரம், சம்பள உயர்வு, இட மாறுதல் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    நாங்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதை அவர்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

    ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு முக்கியம். எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு போடுங்கள்.

    27 ஆண்டுகளில் இப்போதுதான் பா.ஜ.க. முதல் முறையாக கொந்தளித்துப்போய் இருக்கிறது. நீங்கள் தெருவில் இறங்கி மக்களிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என கேளுங்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு அல்லது பா.ஜ.க.வுக்கு என்று சொல்வார்கள். பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவதாக சொல்கிறவர்கள் 5 நிமிடங்கள் கழித்து தாங்கள் துடைப்பத்துக்கு (ஆம் ஆத்மி தேர்தல் சின்னம்) ஓட்டு போடுவோம் என்று வெளிப்படுத்துவார்கள்.

    நாங்கள் பல மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். ஆனால் குஜராத்தில்தான் முதல்முறையாக மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கப்போகிறோம் என கூறுவதற்கு பயப்படுகிறார்கள். சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களை எங்கும் காண முடியவில்லை. பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×