என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை- கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு
    X

    திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை- கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு

    • திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
    • வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ், பைக் மூலம் வந்து செல்கின்றனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக மலைபாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர்.

    அப்போது-7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் நடந்து சென்ற பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்களுடன் சேர்ந்து சிறுத்தையை விரட்டிச் சென்றனர்.

    பொதுமக்கள் விரட்டி வருவதை கண்ட சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. சிறுத்தை தாக்கியதில் கவுசிக் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஸ்வின்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கூண்டு வைக்க உள்ளதாக தெரிவித்தனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிப்பிரி நடைபாதை அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது.

    இதனால் வனப்பகுதியில் உள்ள சிறுத்தை,யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து பக்தர்களை தாக்கி விட்டு செல்கிறது.

    அலிப்பிரி நடைபாதையில் வனவிலங்குகள் வராமல் தடுப்பது குறித்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து பக்தர்களை தாக்கும் சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×