search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகர் தர்ஷனுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கவில்லை- கர்நாடக போலீஸ் மந்திரி பேட்டி
    X

    நடிகர் தர்ஷனுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கவில்லை- கர்நாடக போலீஸ் மந்திரி பேட்டி

    • கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவர், நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 8-ந் தேதி நடிகர் தர்ஷனை பார்க்க அழைத்து செல்வதாக கூறி ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு காரில் கடத்தி வந்தனர். பின்னர், அவரை பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் அருகே பட்டணகெரேயில் உள்ள ஒரு கார் ஷெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அதே பகுதியில் உள்ள பாலத்தின் அருகே வீசி சென்றனர்.

    இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த நடிகர் தர்ஷனின் ஆதரவாளர்கள் 2 பேர் ரேணுகாசாமியின் உடலை எடுத்து சென்றதும் இதற்காக புனித் என்பவரின் காரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து புனித்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புனித் நேற்று கைது செய்யப்பட்டார். அதுபோல், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஹேமந்த் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


    இதற்கிடையே இந்த கொலையில் தனது பெயர் வெளியே தெரியாமல் இருக்க நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகள் 4 பேருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து போலீசில் சரணடைய செய்தார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. மேலும் ரூ. 30 லட்சம் பணத்துக்காக நடிகர் தர்ஷனை காப்பாற்ற இவர்கள் போலீசில் சரணடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் தனியாக வேறு வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தனது கூட்டாளிகள் 4 பேருக்கு தர்ஷன் கொடுத்த ரூ. 30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக கர்நாடக மந்திரி ஒருவர் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அம்மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வரா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரசிகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு போலீசார் எந்த சலுகையும் அளிக்கவில்லை. மற்றவர்களை போலவே தர்ஷனும் போலீஸ் நிலையத்தில் நடத்தப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் பிரியாணி கொடுத்ததாக கூறுவது தவறு. தர்ஷனை காப்பாற்ற யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது. எனவே ஆதாரம் இல்லாமல் வெளியாகும் தகவல்கள் பொய்யானது. நடிகர் தர்ஷனுக்கு எந்த ராஜ உபச்சாரமும் நடைபெற வில்லை. திட்டமிட்டே இது பரபரப்ப படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×