என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது- பஞ்சாப் போலீசார் பிடித்தனர்
- மோகா மாவட்டத்தில் உள்ள ரோடே கிராமத்தில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
- அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
சமீப காலமாக இந்த காலிஸ்தான் கோரிக்கையை 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவர் அம்ரித் பால்சிங் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். வெளிநாட்டில் உள்ள சில சீக்கியர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
கடந்த மாதம் ரூப்கர் மாவட்டம் சாம்கவூர் சாகிப் என்ற பகுதியை சேர்ந்த பரீந்தர்சிங் என்பவரை கடத்தி சென்று தாக்கியதாக அம்ரித்பால் சிங் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவரான லவ்பிரீத் சிங்கை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருந்தனர். இவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி ஆவான்.
அவரை மீட்க அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் அஜ்னாலா போலீஸ் நிலையத்துக்குள் பயங்கர ஆயுதங்கள், நவீனரக துப்பாக்கிகளுடன் தடையை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
இந்த சம்பவத்தில் அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து லவ்பிரீத் சிங் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துதல், கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல், அரசு ஊழியர்களின் கடமையை நிறைவேற்றுவதில் இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பல கிரிமினல் வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
கடந்த மாதம் 18-ந்தேதி அம்ரித்பால் சிங் கையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய பஞ்சாப் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கையாக இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையின் போது அம்ரித்பால் சிங் தப்பி ஓடினார். அவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரிய வந்தது.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அம்ரித்பால் சிங் மாறுவேடங்களில் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றும் அவரை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து மாறுவேடங்களில் தலைமறைவாக சுற்றித்திரிந்தார். அவர் மாறுவேடத்தில் செல்லும் வீடியோக்கள் வெளியாகி இருந்தன.
அவரது மனைவி கிரண் சிங் கவுர் லண்டன் தப்பி செல்ல முயன்றபோது கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று கைது செய்யப்பட்டார். 37 நாட்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரித் பால் சிங் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அங்கிருந்து அவரால் தப்பி ஓட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்தனர். காலை 6.45 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அம்ரித்பால் சிங் மீதும் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி இருந்தது. கைது செய்யப்பட்டுள்ள அவர் திப்ருகார் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதுதொடர்பாக பஞ்சாப் மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:-
மோகா மாவட்டத்தில் உள்ள ரோடே கிராமத்தில் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அசாம் மாநிலம் திப்ருகார் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
பஞ்சாப் மாநில மக்கள் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க வேண்டும். போலியான செய்திகளை பகிர வேண்டாம். எப்போதுமே சரிபார்த்து பகிரவும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்