என் மலர்
இந்தியா
அரசு அதிகாரிகள்-ஊழியர்களின் போன்களை `ஹேக்' செய்ய அனுமதி கேட்கும் லஞ்ச ஒழிப்பு துறை
- அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது.
- சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
மக்கள் தங்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசுத்துறைகளின் மூலமாகவே பெறவேண்டி இருக்கிறது. இதனால் அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது. அதனைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் லஞ்சம் பெறுவது நடந்தபடியே இருக்கிறது.
அரசுத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களில் இதுபோன்று லஞ்சம் வாங்கு பவர்கள் தங்களின் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதையும், லஞ்சம் வாங்குவதையும் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக, அவர்களது செல்போன் உரையாடல்களை காவல்துறை, உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் ஒட்டு கேட்கின்றனர்.
அந்த கோரிக்கையை தான் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசிடம் கேட்டுள்ளது. கேரள மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை டி.ஜி.பி. யோகேஷ் குப்தா தான் அந்த கோரிக்கையை மாநில அரசிடம் வைத்துள்ளார்.
அதாவது கேரள மாநி லத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு துறை "ஹேக்" செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.
இதன் மூலமாக ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வழக்கில் சிக்க வைக்க முடியும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை கேரள மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கினால், அரசின் முன் அனுமதியின்றி யாருடைய போனையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 நாட்களுக்கு "ஹேக்" செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.