என் மலர்
இந்தியா
திருடனை பிடிக்க 'கூகுள் மேப்' மூலம் சென்ற போலீசாருக்கு தர்மஅடி
- தாக்குதலில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
- போலீசாரை தாக்கியதாக 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
'கூகுள் மேப்' மூலமாக வழி தவறி சென்றதால், ஏரிக்குள் கார் பாய்ந்தது, ஆற்றுக்குள் மோட்டார் சைக்கிள் மூழ்கியது என பல விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 'கூகுள் மேப்' மூலமாக திருடனை பிடிக்க வந்த போலீசாருக்கே தொழிலாளர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் நாகாலாந்தில் அரங்கேறி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட தனிப்படை போலீசார், கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு திருடனை தேடி வந்தனர். இதில் 3 பேர் மட்டுமே சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் சாதாரண உடையில் சென்றனர். அந்தப்பகுதியில் உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் திருடன் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.
ஆனால் போலீசாருக்கு, அந்த தேயிலைத்தோட்டம் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. உடனே 'கூகுள் மேப்' உதவியை நாடினர். அது தவறாக வழிகாட்டியதால் நாகாலாந்து மாநிலம் மோகோக்சங் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் போலீசார் வழிதவறி சென்று விட்டனர்.
அங்கிருந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களிடம் கொள்ளையன் பற்றி விசாரித்தனர். ஆனால் போலீசாரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அங்கிருந்த தொழிலாளர்கள் போலீசாரை நையப்புடைத்து தர்ம அடி கொடுத்தனர். வலி தாங்காத போலீசார் அலறி துடித்தனர்.
இந்த தாக்குதலில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய போலீஸ்காரர் அளித்த தகவலின்பேரில், நாகாலாந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசாம் போலீசாரை பத்திரமாக மீட்டனர். மேலும் போலீசாரை தாக்கியதாக 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருடனை பிடிக்க சென்ற இடத்தில், போலீஸ்காரர்களையே தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம் அசாமிலும், நாகாலாந்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.