search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    80 சதவீத ஆசிரியர்களுக்கு கணிதத்தின் அடிப்படை கூட தெரியவில்லை- ஆய்வில் தகவல்
    X

    80 சதவீத ஆசிரியர்களுக்கு கணிதத்தின் அடிப்படை கூட தெரியவில்லை- ஆய்வில் தகவல்

    • 4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர்.
    • பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

    புதுடெல்லி:

    விகிதம் மற்றும் விகிதாசாரம் தர்க்க ரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்க இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 152 பள்ளி களைச் சேர்ந்த 1,300-க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பாட அறிவை அறிந்து கொள்ளும் வகையிலான ஆய்வு ஒன்றை கல்விக்கான முன்னெடுப்புகள் (இஐ) என்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தியது.

    அந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கணிதப் பாடம் சார்ந்த முதல்நிலை மதிப்பீட்டு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் பணிபுரியும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் இந்த அறிக்கை பகிரப்பட்டது. இது தொடர்பான ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்த உதவும் விகிதம் மற்றும் விகிதாசாரம், தர்க்க ரீதியான பகுப்பாய்வு இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளிக்க 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறினர்.

    4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர். ஆனால் 7-ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடை அளித்தனர்.

    பயிற்சி தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் 50 சதவீத கேள்விகளுக்கு 75 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர். 25 சதவீத கேள்விகளுக்கு எந்தவித தவறுகளும் இல்லாமல் 25 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதில் அளித்தனர்.

    இந்த ஆய்வு குறித்த நிறுவனத்தின் துணை நிறு வனர் ஸ்ரீதர்ராஜகோபாலன் கூறியதாவது:-

    பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

    இதை நிறுத்தி விட்டு புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையில் நமது கல்வி முறையை மாற்றி அமைப்பதற்கான விழிப்புணர்வாக நாம் இந்த ஆய்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நவீன கால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கும் தவறான புரிதலோடு ஆசிரியர்கள் பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளையும் ஆசிரியர்கள் செய்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×