search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் தொடர்ந்து அச்சுறுத்தும் பேய் மழை- 63 இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பெங்களூருவில் தொடர்ந்து அச்சுறுத்தும் பேய் மழை- 63 இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

    • பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழை காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூருவில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. விடாமல் பெய்த மழையால் பெங்களூருவில் பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் எங்கும் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல, பல சுரங்கப் பாதைகளும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கியதால் அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கே.ஆர். சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை நிரம்பியிருந்த மழை நீரில் மூழ்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது பெய்து வரும் மழையாலும் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் சிலர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.

    பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. மழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசுவதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இன்றும் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. பெங்களூரு மட்டுமின்றி, பழைய மைசூரு பகுதியும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் கிளைகள் உயர் அழுத்த மின்கம்பிகளில் மோதியதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெங்களூருவின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சிலிக்கான் சிட்டி பகுதியில் 4 அடி ஆழ பள்ளம் உருவானது. இது கடந்த 15 நாட்களில் உருவாகும் மூன்றாவது பள்ளமாகும். இந்த பள்ளங்களால், நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரின் போக்குவரத்து பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. கன மழை காரணமாக கடந்த 3 மாதங்களில் 56 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூரு மக்களை மீட்பதற்காக போர்க்கால நடவடிக்கைகளை தொடங்குமாறு நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். மேலும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் 60-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை திறக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

    அதன்படி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த கட்டுப்பாட்டு அறைகளில் தொடக்கத்தில் 63 துணைப்பிரிவு அலகுகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 1-ந் தேதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும்.

    Next Story
    ×