என் மலர்
இந்தியா
சுரேஷ் கோபி மூலமாக கேரளாவில் கால் பதிக்கும் நம்பிக்கையில் பாரதிய ஜனதா
- சுரேஷ் கோபி மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
- திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி கேரளாவில் எந்த மக்களவை தொகுதியிலும் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா ஈடுபட்டது. இதற்காக சில திட்டங்களை கேரளாவில் செயல்படுத்தி வருகிறது.
முக்கியமாக அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் சுரேஷ்கோபி மூலமாக அதனை நிறைவேற்ற பாரதிய ஜனதா முடிவு செய்தது. கேரளாவில் 1990-களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்களில் ஒருவராக சுரேஷ்கோபி இருந்தார். அவர் மீதான நம்பிக்கையில் 2019 மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா களம் இறக்கியது.
அந்த தேர்தலில் நிலவிய மும்முனை போட்டியில் சுரேஷ்கோபி 3 லட்சம் வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இது கேரளாவில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 11.1 சதவீதத்தில் இருந்து 28.2 சதவீதமாக அதிகரிக்க உதவியது. திருச்சூரில் பாரதிய ஜனதாவின் அதிர்ஷ்டத்தை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ்கோபியை கையில் எடுத்தார்.
அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்கியது. அந்த பதவி 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு திருச்சூரில் பாரதிய ஜனதா செல்வாக்கை உயர்த்த பிரதமர் மோடி, சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்தார். அவர் மூலம் பல்வேறு பணிகளை பிரதமர் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போதைய மக்களவை தேர்தலிலும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட சுரேஷ்கோபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் மூத்த தலைவரான முரளீதரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் சுனில்குமார் ஆகியோரை எதிர்த்து களம் காண்கிறார்.
திருச்சூர் தொகுதியில் அவரது வெற்றிக்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவரது வெற்றியின் மூலம் கேரளாவில் தனது கணக்கை திறக்க வேண்டும் என்று நம்பிக்கையில் பாரதிய ஜனதா உள்ளது.