என் மலர்
இந்தியா

பா.ஜ.க. தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு- 2 பேர் கைது
- நள்ளிரவு 12 மணியளவில் மனோரஞ்சன் வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.
- ரிக்ஷா வண்டியில் வந்த மர்மநபர்கள் சிலர் வீட்டிற்குள் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியது தெரிந்தது.
சண்டிகார்:
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மனோரஞ்சன் காலியா. மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், பா.ஜ.க. கட்சியின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார். ஜலந்தரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
நள்ளிரவு 12 மணியளவில் அவருடைய வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரிக்ஷா வண்டியில் வந்த மர்மநபர்கள் சிலர் வீட்டிற்குள் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியது தெரிந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோரஞ்சன் வீட்டில் குண்டு வீசியவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் சதித்திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெடிகுண்டு வீச பயன்படுத்தப்பட்ட ரிக்ஷா வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






