search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான் சட்டசபைக்கு பசு மாட்டை ஓட்டி வந்த பாஜக எம்.எல்.ஏ.
    X

    ராஜஸ்தான் சட்டசபைக்கு பசு மாட்டை ஓட்டி வந்த பாஜக எம்.எல்.ஏ.

    • தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
    • இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

    அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.

    Next Story
    ×