search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருணாசலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.. 3 வது முறையாக முதல்வராகிறார் பெமா காண்டு
    X

    அருணாசலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.. 3 வது முறையாக முதல்வராகிறார் பெமா காண்டு

    • அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 43 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
    • இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

    அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

    அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டன.ஏற்கனவே அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

    இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 10 மணி நிலவரப்படி ஓட்டுக்கள் எண்ணப்பட்ட 50 தொகுதி களில் 35 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். மதியம் 1 மணிக்கு அவர்கள் வெற்றி முகத்துடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல மேலும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 44 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாரதீய ஜனதா சென்று இருக்கிறது. அதே சமயத்தில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட வெற்றி கிடைக்கவில்லை. 19 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் சிலர் மோசமான நிலையில் தோல்வியை தழுவினார்கள்.

    அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். அருணாசல பிரதேசத்தின் முக்கிய சாலைகளில் இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

    முதல்-மந்திரி பெமா காண்டுவை அந்த கட்சி தொண்டர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். அவர் 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×