என் மலர்
இந்தியா
பட்ஜெட் 2025- 26: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், வருமான வரிவிதிப்பு எளிமைப்படுத்தப்படும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான வரம்பு 4 ஆண்டுகளாக உயரத்தப்ட்டுள்ளது. வருமான வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டுவரப்படும். அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும். புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்.
புதிய வரி முறையின் வரி அடுக்கில் சில திருத்தங்களை நான் முன்மொழிகிறேன். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும் 24 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கலாம்" என்று தெரிவித்தார்.