search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வலியுறுத்தல்
    X

    காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வலியுறுத்தல்

    • தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்றிரவு டெல்லி சென்றிருந்தார்.

    இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார். காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    தமிழகத்திற்கு மொத்தம் 22.54 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சாகுபடி பிரச்சினை மிக மோசமாகி விடும்.

    எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடியாக குறைந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்நாடகாவில் உள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ். ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 114 டி.எம்.சி.யில் 32 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக துணை முதல் மந்திரி சிவக்குமார் கூறி வருவதையும் மத்திய மந்திரியின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார்.

    எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். இதை மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி சொல்லி உள்ளேன். 22.54 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    Next Story
    ×