search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு பண்ணை வீட்டில் பிரபலங்களின் போதை பார்ட்டி.. பிரபல தெலுங்கு நடிகை கைது
    X

    பெங்களூரு பண்ணை வீட்டில் பிரபலங்களின் போதை பார்ட்டி.. பிரபல தெலுங்கு நடிகை கைது

    • பெங்களூருவில் போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமா கைது.
    • போலீஸ் சோதனையின் போது, ஆந்திரா, கர்நாடக திரை உலகினர் பங்கேற்றது தெரியவந்தது.

    பெங்களூரு புறநகர் பகுதியில் சிங்கேனா அக்ரஹாராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த மே 20 மாலை 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி' என்ற தலைப்பில் நடந்த ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.

    இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவலறிந்து அங்கு சென்ற கர்நாடக காவல்துறையினர், எம்.டி.எம்.ஏ, கோகைன், ஹைட்ரோ கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது

    இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நபரிடமும் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரவது கேட்டால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கர்நாடகாவைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ரேவ் பார்ட்டிகளை பொறுத்துக் கொள்ளாது என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

    இந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த ரேவ் பார்ட்டிக்கு செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து நடிகை ஹேமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×