என் மலர்
இந்தியா

'சந்திரயான்-4' விண்கலத்தை 2027-ம் ஆண்டு ஏவ திட்டம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

- ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
- சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர். இதற்காக 'சந்திரயான்-3' திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரயான்-4' விண்கலத்தை தயாரித்து உள்ளனர். இந்த திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு திருப்பி கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதனை வருகிற 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'சந்திரயான்-4' விண்கலம் 9 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்டதாகும். சந்திரயான்-3 திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சி கருவிகளை 5 தொகுதிகளாக பிரித்து 2 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஒரு ராக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ராக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. ஏவும் பணிக்கு எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் ஒரு மாத இடைவெளியில் ஏவப்படுகிறது. ஒரே திட்டத்திற்கு 2 ராக்கெட்டுகள் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, 'விண்வெளி நிலையத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விண்ணில் 2 செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைப்பது மற்றும் பிரிப்பது போன்ற தொழில்நுட்ப அறிவு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
'சந்திரயான்-4' திட்டத்தில் 2 ராக்கெட்டுகள் தனித்தனியாக ஏவிய பின்னர், பூமி சுற்றுப்பாதையில் அவற்றை இணைக்கும் பணி நடக்கும். அதற்கு பிறகு, உந்துவிசை தொகுதி அடுத்து விண்கலத்தை நிலவு சுற்றுப்பாதையில் செலுத்தும். அங்கு பிரிந்த பிறகு, மீதம் உள்ள 2 தொகுதிகள் பிரிந்து நிலவு மேற்பரப்பில் தரையிறங்கி மாதிரிகளை சேகரிக்கும்.
தொகுதிகளில் ஒன்று நிலவு சுற்றுப்பாதையில் மீதமுள்ள தொகுதிகளுடன் இணைக்கப்படும். பின்னர் மறு நுழைவு தொகுதிக்கு நகர்த்தப்படும். இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும். இந்த பணிக்கு அதிக திறன் கொண்ட உந்துவிசை அமைப்பு, சிறப்பு ஆராய்ச்சி கருவிகள் மற்றும் மாதிரி சேகரிப்புக்கான ரோபோ கருவிகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியமாகிறது. இவை அனைத்திற்குமான பணிகள் நடந்து வருகின்றன.
சந்திரயான்-5 என்று அழைக்கப்படும் நிலவு துருவ ஆய்வு திட்டம் (லூபெக்ஸ்) இஸ்ரோ-ஜப்பானுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டுப்பணி நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர் எந்திரத்தை உருவாக்க உள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையத்திற்கு இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கருவிகளைக் கொண்டு செல்லும். விண்கலத்தின் தாங்கும் சக்தி 6 ஆயிரத்து 200 கிலோவாக இருக்கும். அதே நேரத்தில் லூபெக்ஸ் ரோவர் 350-400 கிலோ எடையுள்ளதாக இருக்கும். இதுவே சந்திரயான்-3 திட்டத்தில் 26 கிலோ எடையிலான லேண்டர் பயன்படுத்தப்பட்டது.
இதற்கான திட்ட கட்டமைப்பில் பூமி மற்றும் நிலவு சுற்றுப்பாதைகளில் பல இணைப்பு மற்றும் பிரிப்பு சோதனைகளும் செய்ய இருக்கிறோம். அதற்கான உள் அமைப்பு, வடிவமைப்புகளை முடித்துவிட்டோம். தற்போது பல்வேறு துணை அமைப்புகளின் வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.