search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் புதிய சாலை அமைக்கும் சீனா- சாட்டிலைட் படங்கள் வெளியாகி அதிர்ச்சி
    X

    காஷ்மீரில் புதிய சாலை அமைக்கும் சீனா- சாட்டிலைட் படங்கள் வெளியாகி அதிர்ச்சி

    • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வெளியாகி உள்ளன.

    கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×