search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனாவின் அதிநவீன உளவு கப்பல் 23-ந்தேதி இலங்கை வருகிறது: தமிழகத்தின் தென் பகுதியை மிக எளிதாக கண்காணிக்கும் அபாயம்
    X

    சீனாவின் அதிநவீன உளவு கப்பல் 23-ந்தேதி இலங்கை வருகிறது: தமிழகத்தின் தென் பகுதியை மிக எளிதாக கண்காணிக்கும் அபாயம்

    • கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டது.
    • இந்தியப் பெருங்கடல் பகுதியை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சீனா அதற்கு தளமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பலான ஷி யான்-6 வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு வர உள்ளது. இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    3,999 டன் எடை கொண்ட இந்த கப்பல் குவாங்சோவில் உருவானது. தற்போது தென் சீனக் கடலுக்குள் தெற்கு திசையில் பயணிக்கும் இந்த உளவுக் கப்பல் மலாக்கா கடல் பகுதி வழியாக இலங்கையை அடைகிறது. இலங்கை பொருளாதார மண்டலம் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடலின் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்த கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கப்பலில் 20 அதி நவீன அறிவியல் ஆய்வு கருவிகள் உள்ளன. 13 ஆய்வு குழுவினர் இதில் இடம்பெற்று உள்ளார்கள். இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டது.

    இந்தியப் பெருங்கடல் பகுதியை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சீனா அதற்கு தளமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது. இலங்கைக்கு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உதவுவது போல துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்களை நோக்கி கவனம் செலுத்தி வருகிறது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை மீறி இலங்கை சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது.

    அதிநவீன ஆய்வக கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை கொண்ட இந்த கப்பலின் செயல்பாடுகள் இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். எனவே இந்திய பெருங்கடலுக்குள் ஷி யான் - 6 கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி உள்ளது.

    சீனாவின் ராணுவக் கப்பல்களுக்கு இலங்கை இடம் கொடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிப்பதில் பெயர் பெற்ற சீனக் கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

    மற்றொரு உளவு கப்பல் ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இலங்கைக்கு வருகை தந்ததோடு 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் முகாமிட்டிருந்தது.

    சீனாவின் போர்க்கப்பலான ஹை யாங் 24 சில வாரங்களுக்கு முன்னர் 138 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருந்தது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்த காலத்தில், சீனாவின் பெய்ஜிங் கடனாகக் கொடுத்த தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்திருந்தார்.

    இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது.

    எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இலங்கை - இந்தியாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Next Story
    ×