search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரசவத்தின்போது உயிரிழந்த கோவை பெண்- குழந்தையும் இறந்தது
    X

    பிரசவத்தின்போது உயிரிழந்த கோவை பெண்- குழந்தையும் இறந்தது

    • திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர்.
    • பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கோவையை சேர்ந்தவர் ஹரீஷ்குமார். இவருக்கு கடந்த வருடம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள நல்லபுள்ளியை சேர்ந்த அனிதா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அவர்களது ஊரான நல்லபுள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

    இதற்கிடையே பிரசவத்தின்போது, அனிதாவுக்கு அதிகளவில் ரத்தபோக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து டாக்டர்கள் அவரை திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே, அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே தாயும், சேயும் இறக்க காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சித்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாயும், சேயும் மரணம் அடைந்தது குறித்து அறிந்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கேரளாவில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×