search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆசிட் வீச்சில் காயமடைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி கவலைக்கிடம்- தொடர்புடையவரை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு
    X

    ஆசிட் வீச்சில் காயமடைந்த சுதீர்கான், ஆசிட் வீசிய சஜிகுமார்,

    ஆசிட் வீச்சில் காயமடைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி கவலைக்கிடம்- தொடர்புடையவரை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு

    • மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார்.
    • திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

    அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார்.

    சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகளில் சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தலைமறைவாகிவிட்ட சஜிகுமாரை போலீசார் தீவிரமாக தேடினர்.

    அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் திருவனந்த புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சுதீர்கானின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×