என் மலர்
இந்தியா

'நாடு கடத்தப்பட்ட 205 இந்தியர்களை கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா' - காங்கிரஸ் குற்றச்சாட்டு
- சி-17 ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது.
- கைவிலங்கிடப்பட்டு ஆடைகளை களைந்து பரிசோதிக்கப்பட்ட்டார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாட்டவரை நாடுகடத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்காவில் சுமார் 18,000 சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை நாடுகடத்தும் பணியில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இந்திய அரசு தெரிவித்தது. அடுத்த வாரம் அமெரிக்கா சென்றுடிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளாதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் முதற்கட்டமாக 205 பேரை அந்நாடு, சி-17 ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது. அவர்கள் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
விமானத்தில் வரும் இந்தியர்கள் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் அவர்களின் கைவிலங்கிடப்பட்டு நிலையில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. விமானத்தில் அமர்ந்துள்ளவர்கள் கை மற்றும் கால்களின் விலங்கிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளன. சமூக வலைதளங்கலில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும்போது இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு துன்புறுத்தப்படுவது வருத்தமளிக்கின்றன.
2013 டிசம்பரில் இந்திய பெண் அதிகாரி தேவ்யானி கோப்ரகடே [விசா முறைகேடு தொடர்பான பிரச்சனையில்] அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்டு ஆடைகளை களைந்து பரிசோதிக்கப்பட்டபோது அப்போதிருந்த ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கடும் எதிர்வினை ஆற்றியது.
ராகுல் காந்தி, மீரா குமார், சுசில் குமார் உள்ளிட்ட தலைவர்கள் அந்த சமயம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிகாரிகள் குழுவை சந்திக்க மறுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவை வன்மையாக கண்டித்தார். அமெரிக்க வெளியுறவு துறைக்கு அளித்து வந்த சலுகைகளை ரத்து செய்தார். அமெரிக்க வெளியுறவு செயலர் அதன்பின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
ஆனால் தற்போது இந்தியர்கள் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். முன்னதாக பிரேசில் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டவர்களையும் இவ்வாறு கைவிலங்கிட்டு தண்ணீர் கொடுக்காமல் துன்புறுத்தியதாக அந்நாடும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.






