search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: டி.கே.சிவக்குமார்
    X

    பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: டி.கே.சிவக்குமார்

    • பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது.
    • பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    போவி சமூகத்திற்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதாக பா.ஜனதா உறுதியளித்து இருந்தது. ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. அதனால் அந்த சமூகத்தை சேர்ந்த பாபுராவ் சின்சனசூர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். ஒக்கலிகர்கள், லிங்காயத் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீட்டை இந்த அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. அதுவும் முஸ்லிம் சமூகத்தின் இட ஒதுக்கீட்டை பறித்து வழங்கியுள்ளனர். அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இந்த இட ஒதுக்கீட்டு உத்தரவை நாங்கள் ரத்து செய்வோம்.

    அதே போல் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வையும் அரசியல் சாசனத்தில் சேர்க்கவில்லை. பா.ஜனதா அரசு எதையும் சட்டப்படி செய்யவில்லை. பா.ஜனதா அரசு சமீபத்தில் எடுத்த அனைத்து முடிவுகளும், மக்களை முட்டாளாக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் தாக்கம் வருகிற தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இந்த பா.ஜனதா அரசு செய்த தவறுகளை நாங்கள் சரிசெய்து அனைத்து தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவோம். எங்கள் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் 4-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாளை (இன்று) நான் டெல்லி செல்கிறேன். இதில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் இறுதி முடிவை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எடுப்பார்.

    எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதாவில் தான் உள்கட்சி பிரச்சினை உள்ளது. அதனால் தான் அவர்கள் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் மோதல் நிலை உள்ளது. அதனால் தான் அந்த 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சித்தராமையா 2 தொகுதியில் போட்டியிட உள்ளதாக சொல்கிறீா்கள். டிக்கெட் வேண்டும் என்று கேட்பவர்களை வேண்டாம் என்று கூற முடியுமா?. ஆதரவாளர்கள் கேட்பதில் தவறு இல்லை. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    Next Story
    ×